உலகம்

மியன்மார்: கடந்த ஒரு வாரத்தில் 60-க்கும் மேற்பட்ட அதிர்வுகள்

05/04/2025 07:43 PM

மண்டலே, 05 ஏப்ரல் (பெர்னாமா) -- மியன்மாரில் மார்ச் 28-ஆம் தேதி ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து, நாட்டின் மத்திய பகுதியான மண்டலே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி அப்பகுதியில் 2,053 பேர் மரணமடைந்த நிலையில், 2,691 பேர் காயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அதோடு, 210 பேரை காணவில்லை என்று உள்ளுர் நாளிதழான Myanma Alinn செய்தி வெளியிட்டுள்ளது.

மியன்மார் தலைநகரான நேப்பிடாவில் 511 உயிரிழந்துள்ள வேளையில், 842 காயமடைந்ததோடு ஒன்பது பேரை காணவில்லை.

அதனைத் தொடர்ந்து, Sagaing வட்டாரத்தின் பலி எண்ணிக்கை 471-ஆக பதிவாகி இருப்பதுடன் 688 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் இருவரை காணவில்லை.

இந்நிலநடுக்கத்தினால், நாடு முழுவதிலும் 3,145 பேர் மரணமடைந்த வேளையில் 4,589 பேர் காயமடைந்ததுடன் 221 பேரை இன்னும் காண்டவில்லை என்று மியன்மார் வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது

மற்றொரு நிலவரத்தில், மியன்மாரை 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதிலிருந்து கடந்த ஒரு வாரத்தில் 60-க்கும் மேற்பட்ட அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

சுமார் ஒரு கோடியே 90 லட்சம் மக்கள் தற்போது மியன்மாரில் உதவித் தேவைப்படும் நிலையில் உள்ளனர்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]