சுபாங் ஜெயா, 06 ஏப்ரல் (பெர்னாமா) -- புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் முதற்கட்டமாக 2,500 ரிங்கிட் உதவி தொகையை நாளை வழங்கவுள்ளது.
இதுவரை, அந்த உதவி தொகையைப் பெற்றுக் கொள்வதற்கு 200 வீடுகள் தகுதி பெற்றிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் முஹமட் ஃபஹ்மி ஙா கூறினார்.
"நாளை (திங்கட்கிழமை), பட்டியல் இறுதி செய்யப்பட்டு வருகிறது. தீயணைப்பு துறை மற்றும் பிடிஆர்எம் தரப்பு சம்பவ பகுதிகளுக்குச் சென்று எந்த வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன மற்றும் தகுதியானவை என்பதைக் கண்டறிந்துள்ளன. எனவே, ஒவ்வொரு குடும்ப தலைவருக்கும் உதவி வழங்கப்படும்'', என்று அவர் கூறினார்.
இன்று, சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் முஹமட் ஃபஹ்மி ஙா அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளுக்கு ஏற்ப மேலும் பல உதவிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவர்கள் நாளை தொடங்கி பள்ளிக்குச் செல்வதற்கு, Prasarana Malaysia நிறுவனம் 10 வேன்களையும் வழங்குகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)