ஜித்ரா, 06 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த ஏப்ரல் முதலாம் தேதி நிகழ்ந்த, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் தொடர்பான முழு விசாரணையை மேற்கொள்வதற்கு அரச மலேசிய போலீஸ் படை பிடிஆர்எம்-மை முழுமையாக நம்பும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தொடக்கத்தில் இருந்தே போலீஸ் துறை இச்சம்பவம் தொடர்பில் ஈடுபட்டு வருவதாகவும், இன்றுவரை அதன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
''விசாரணை நடத்தும் போலீஸ் குழுவால் அவ்வப்போது எனக்கு அண்மைய தகவல்கள் அளிக்கப்படுகின்றன. மேலும், அவர்கள் விசாரணையை முடிக்கட்டும். எல்லாவற்றையும் உள்ளடக்கிய விசாரணை. ஆதாரங்களைச் சேகரிப்பதற்குத் துல்லியம் மற்றும் புலனாய்வு தேவைப்படும் ஒரு முயற்சியாகும்'', என்று அவர் கூறினார்.
இன்று, கெடா, குபாங் பாசு மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற பிடிஆர்எம் உடனான உள்துறை அமைச்சரின் சந்திப்பு மற்றும் நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பில் கலந்துகொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இது தொடர்பில், எந்தவோர் ஊகத்தையும் குறிப்பாக சமூக ஊடகங்களில் எந்தவோர் ஆருடத்தையும் பொதுமக்கள் பகிராமல் இருந்தாலே போதுமானது என்று டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)