பொது

ஆசியான்: பயணங்களைத் திட்டமிடுங்கள் - பிளஸ் வேண்டுகோள்

22/05/2025 12:35 PM

புத்ராஜெயா, 22 மே (பெர்னாமா) -- 46வது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு, பல சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படுவதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை பயனீட்டாளர்கள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு பிளஸ் மலேசியா நிறுவனம், பிளஸ் அறிவுறுத்தியிருக்கிறது.

அனைத்துலக பிரதிநிதிகளின் போக்குவரத்திற்கு வழி விடும் வகையில், புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை அறிவுறுத்தல்களின்படி, சில நெடுஞ்சாலை பாதைகளும் தற்காலிகமாக மூடப்படும் என்று பிளஸ் தெரிவித்துள்ளது.

மே 23 முதல் 26-ஆம் தேதி வரை, காலை 7 மணி தொடங்கியும், மே 28 ஆம் தேதி காலை 8 மணி தொடங்கியும் சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று, வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் பிளஸ் குறிப்பிட்டுள்ளது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ-இல் இருந்து புத்ராஜெயா செல்லும் சாலை, ELITE நெடுஞ்சாலை, NKVE நெடுஞ்சாலை மற்றும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையைப் பயன்படுத்தி சுங்கை பூலோவில் இருந்து ஜாலான் டூத்தாவுக்கு செல்லும் சாலை ஆகியவை மூடப்படும் என்று பிளஸ் கூறியது.

சம்பந்தப்பட்ட அனைத்து சாலைகளில் சீரான செயல்பாடுகளை உறுதி செய்ய தமது தரப்பு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

கே.எல்.ஐ.ஏ மற்றும் சுபாங் விமான நிலையத்திற்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் பயனீட்டாளர்கள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)