பொது

அமிலம் என்று நம்பப்படும் திரவம் வீசப்பட்ட சம்பவத்தில் பெண் ஒருவர் கைது

22/05/2025 11:33 AM

பாச்சோக், 22 மே (பெர்னாமா) -- கடந்த சனிக்கிழமை, கிளந்தான் பாச்சோக்கில் ஸ்பா உரிமையாளர் மீது அமிலம் என்று நம்பப்படும் திரவம் வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை கிளந்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.

38 வயதான அப்பெண் புதன்கிழமை கோலா கிராயில் உள்ள ஒரு ரப்பர் தொழிற்சாலைக்கு முன் கைது செய்யப்பட்டதாகக் கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முஹமட் யூசொஃப் மாமாட் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அப்பெண் ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரிந்ததாகவும், அவர் முந்தைய குற்றப் பதிவுகள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்றும், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில்  அவர் கூறினார்.

அவரிடமிருந்து பெரொடுவா மைவி ரக கார், ஒரு கைதொலைபேசி மற்றும் வாகனக் கட்டுப்பாட்டுச் சாதனம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேல் விசாரணைக்கு உதவுவதற்காக அப்பெண் இன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கடுமையான காயங்களை ஏற்படுத்தும் எந்தவொரு குற்றச்செயலுக்கு எதிராக போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் முஹமட் யூசொஃப் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)