உலகம்

மியன்மார்: இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள்

03/04/2025 05:25 PM

மண்டலே, 03 ஏப்ரல் (பெர்னாமா) -- கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார், மண்டலேயில் மீட்புப் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களைத் தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்திருக்கும் வேளையில் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மண்டலே, ஒங் மியா தார் சென் நகரில் உள்ள ஸ்கை வில்லா கட்டிடத்தின் இடிபாடுகள் உடைக்கப்படும் காணொளிகளை அந்நாட்டின் தீயணைப்புத் துறை வெளியிட்டது.

அப்பகுதியில் பெய்து வரும் மழையினால் தேடி மீட்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மியன்மாரை உலுக்கிய நிலநடுக்கம் தென்கிழக்காசிய நாடுகளில் கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப் பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]