சுபாங் ஜெயா, 04 ஏப்ரல் (பெர்னாமா) -- சிலாங்கூர், புத்ரா ஹைட்சில் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு முன்னர், அதாவது மார்ச் 30-ஆம் தேதி, அவ்விடத்திற்கு அருகில் நிலத்தைத் தோண்டும் பணிகள் நடைபெற்றதை அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம் உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து, சுமார் 30 மீட்டர் தொலைவில் பழைய கழிவுநீர் வடிகால் குழாயை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்றது, தொடக்க கட்ட விசாரனையில் தெரிய வந்ததாக சிலாங்கூர் போலீஸ் தலைவர், டத்தோ ஶ்ரீ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட தோண்டும் பணிகளில் இரண்டு மண்வாரி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் ஒன்று குழாய் வெடித்தபோது மண்ணில் புதையுண்டதாக நம்பப்படுவதாகவும் டத்தோ ஶ்ரீ ஹுசேன் கூறினார்.
இன்று, புத்ரா ஹைட்சில் உள்ள சம்பவக் கட்டுப்பாட்டு மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஹுசேன் அவ்வாறு தெரிவித்தார்.
தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டு, வெடிப்பு சம்பவம் ஏற்படுவதற்கு முன்னரே, மற்றொரு மண்வாரி இயந்திரம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதனிடையே, வெடிப்புக்கான காரணத்தைத் தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் கண்டறிந்து விரிவான அறிக்கையைத் தயாரிப்பதற்காக, மாநில பொதுப்பணித் துறை, ஜேகேஆர் தலைமையிலான தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை, DOSH சம்பந்தப்பட்ட இரண்டு விசாரணை அறிக்கைகளும் திறக்கப்பட்டுள்ளன.
அதோடு, துரோகம் மற்றும் அலட்சியம் போன்ற ஏதேனும் குற்றவியல் அம்சங்கள் உள்ளதா என்பதை கண்டறிய போலீசார் மற்றொரு விசாரணை அறிக்கையையும் திறந்துள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)
© 2025 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை