பொது

சேன் ராயனின் மரணம் சந்தேகத்திற்குரியது, சாதாரண மரணம் அல்ல - சாட்சிகள்

08/04/2025 08:15 PM

பெட்டாலிங் ஜெயா, 8 ஏப்ரல் (பெர்னாமா) -- ஆட்டிஸம் எனப்படும் மதி இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் சேன் ராயன் அப்துல் மாதின்-னின் மரணம் சாதாரணமானது அல்ல.

மாறாக, அது சந்தேகத்திற்குரியது அல்லது நிரூபிக்கப்படும் வரையில் கொலை சம்பவமாக வகைப்படுத்தப்படுவதாக, இன்று பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2023-ஆம் ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி, மதியம் மணி 12-க்கு சேன் ராயனின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை செய்வதற்கு முன்னர், அச்சிறுவன் கண்டுடெடுக்கப்பட்ட டமான்சாரா டாமாய், இடாமான் அடுக்குமாடி குடியிருப்பு, புளோக் ஆர் பகுதியில் உள்ள நீரோடையைப் பார்வையிட்டதாக ஜோகூர், பாசிர் கூடாங் மருத்துவமனையின் தடயவியல் துறையில் பணியாற்றும் 54 வயதாக தடயவியல் ஆலோசக மருத்துவ நிபுணர் டாக்டர் ரொஹாயூ சஹார் அட்னான் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அச்சிறுவன் சம்பவ இடத்தில் இருந்திருந்தால், அங்கு ஏற்பட்ட காயங்களை உறுதிப்படுத்த அந்த வருகை தமக்கு முக்கியம் என்றும் அதன் பின்னரே தாம் பிரேதப் பரிசோதனையை செய்யவிருப்பதாக கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சேன் ராயனின் பெற்றோர்களான இஸ்மானிரா அப்துல் மனாஃப் மற்றும் சேம் இக்வான் சஹாரி ஆகியோர் எதிர்நோக்கியிருக்கும் புறக்கணிப்பு வழக்கின் விசாரணையின் 15-வது நாளில், சாட்சியளித்த 27-வது அரசு தரப்பு சாட்சியான அவர் அவ்வாறு கூறினார்.

பிரேதப் பரிசோதனை செய்து சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பின்னர், அது மூச்சுத் திணறல் காயம் அல்ல என்றும், இறந்தவரின் காயங்கள் சம்பவ இடத்துடன் ஒத்துப்போகவில்லை என்றும் தாம் முடிவு செய்தாக டாக்டர் ரொஹாயூ மேலும் தெரிவித்தார்.

''சம்பவம் நிகழ்ந்த இடம் ஒரு நீரோடைப் பகுதி, சிறிய செடிகளும் பெரிய செடிகளும் உள்ளன. அதனால், இறந்தவரின் உடலில் மழுங்கிய காயங்கள் ஏற்படலாம். ஆனால் அச்சிறுவன் அதில் விழுந்திருந்தால் உடலின் முதன்மை பாகங்களில் காயங்கள் ஏற்பட்டிருக்கும். அது, கழுத்து நெறிக்கப்பட்ட காயத்தை ஏற்படுத்தாது." என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)