பொது

லிமா'25: இணையச் சேவை சிறப்பான முறையில் செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

19/05/2025 06:44 PM

லங்காவி, 19 மே (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டு லங்காவி அனைத்துலக விமானம் மற்றும் கடல்சார் கண்காட்சி, லிமா'25 முன்னிட்டு, அது தொடர்புடைய இடங்களில் இணையச் சேவை சிறப்பாக இருப்பதை, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி மூலம் தொடர்பு அமைச்சு உறுதி செய்யும்.

கண்காட்சி நடைபெறவிருக்கும் இடத்தில் இணையச் சேவை தொடர்பாக எழும் சிக்கல்களைக் கண்காணிக்க எம்.சி.எம்.சி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

பல பார்வையாளர்களின் மையமாக லிமா'25 விளங்கவிருப்பதால், அங்கே இணையச் சேவை திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதை அமைச்சு உறுதி செய்ய விரும்புவதாக அவர் விவரித்தார்.

"இதுவரை இணையச் சேவை தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை. உண்மையில், தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பல இடங்களில் இணைய அணுகலை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன," என்று ஃபஹ்மி  குறிப்பிட்டார்

லிமா'25 நடைபெறும் இடத்திற்கு நாளை நேரில் சென்று அங்குள்ள நிலைமைகள் மற்றும் இணைய வசதிகளைப் பார்வையிடப் போவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று லங்காவியில் நடைபெற்ற வட மண்டல பாதுகாப்பான இணையப் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)