விளையாட்டு

தீவிர பயிற்சியில் ஏரன் சியா-சோ வூய் யிக்

19/05/2025 06:25 PM

கோலாலம்பூர், 19 மே (பெர்னாமா) -- 2025 தாய்லாந்து பொது பூப்பந்து பட்டத்தைக் கைப்பற்றியதை அடுத்து, நாட்டின் தேசிய ஆடவர் இரட்டையரான ஏரன் சியா-சோ வூய் யிக் ஜோடி மீண்டும் பயிற்சிக் களத்தில் இறங்கிவிட்டனர்.

நேற்றிரவு நாடு திரும்பி, சில மணி நேரங்கள் மட்டுமே ஓய்வில் இருந்த அவர்கள் நாளைத் தொடங்கும் மலேசிய மாஸ்டர்ஸ் போட்டிக்காக இன்று காலை 7.30 மணியளவில் அரங்கில் அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

தங்கள் மீது மலேசியாவும் ஆதரவாளர்களும் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கும் நிலையில், அதனை தற்காத்துக்கொள்ள உழைக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

"நான் இப்போதுதான் வந்ததால் எனக்கு உண்மையில் போதுமான தூக்கம் இல்லை. அதனால் நான் இன்று ஓய்வெடுக்கப் போகிறேன், மதியம் ஓய்வெடுப்பேன், நாளை ஒரு நாள் ஓய்வு உள்ளது. புதன்கிழமை எங்களுக்கு ஒரு போட்டி இருப்பதால் இன்னும் நேரம் இருக்கிறது," என்று 
ஏரன் சியா கூறினார்.

இதனிடையே, அடுத்த போட்டிக்கு முன்னதாக இந்த பயிற்சி அரங்கம் தங்களுக்கு மிகவும் முக்கியம் என்று வூய் இக் கூறினார்.

உலகத் தர வரிசையில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் இந்த ஜோடி, மலேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் முதலில் தைவான் ஆட்டக்காரர்களுடன் மோதுகின்றனர்.

நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 20-22, 21-17, 21-12 என்று டென்மார்க்கை வீழ்த்தி மலேசியா தாய்லாந்து பொது பூப்பந்து பட்டத்தை வென்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)