உலகம்

ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய்

19/05/2025 06:22 PM

வில்மிங்டன், 19 மே (பெர்னாமா) --    அமெரிக்க முன்னாள் அதிபரான ஜோ பைடனுக்கு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அந்த உயிர்க்கொல்லி நோய் அவரின் எலும்புகள் வரை பரவியுள்ளதாக நேற்று அவரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

82 வயதுடைய பைடனுக்கு சிறுநீரில் ஏற்பட்ட அறிகுறிகளைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அந்நோய் கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது, அவரும் அவரது குடும்பத்தாரும் மருத்துவர்களுடன் இணைந்து சிகிச்சை முறைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த 2021 முதல் 2025ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றிருந்த பைடன், கடந்தாண்டு ஜூலை மாதம் மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதற்கான தமது முயற்சியை திடீரென நிறுத்திக் கொண்டார்.

இந்நிலையில், இதற்கு முன்பே பைடனின் உடல் ஆரோக்கியம் குறித்தி ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வந்தது.

குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனால்ட் டிரம்பிற்கு எதிரான விவாதத்தின் போது ஏற்பட்ட ஒரு நிறுத்தம், அவரது சக ஜனநாயகக் கட்சியினரிடையே பதற்றத்தை ஏற்படுத்திய சில வாரங்களுக்குப் பிறகு இது நிகழ்ந்தது.

துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் கட்சியின் வேட்பாளராகப் பொறுப்பேற்றிருந்தும், கடந்தாண்டு நவம்பரில் டிரம்பிடம் அவர் தோல்வியுற்றார்.

இதுவரை அமெரிக்க அதிபராக பதவியேற்றவர்களின் பைடனே அதிக வயதானவர் என்று அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில் பேசப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)