உலகம்

மக்கள் சக்திக் கட்சியை விட்டு வெளியேறுவதாக சுக் யோல் அறிவிப்பு

17/05/2025 06:09 PM

சியோல், 17 மே (பெர்னாமா) --  தென்கொரியாவில், பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் யோல் ஆளும் மக்கள் சக்திக் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

வரும் ஜூன் 3ஆம் தேதி அந்நாட்டில் திடீர் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில், அதற்கு முன்னரே கட்சியில் இருந்து வெளியேறுவதாக, யூன் சுக் யோல்
தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த டிசம்பரில் அதிரடியாக இராணுவச் சட்டத்தை அறிவித்த யூன் சுக் யோல் பின்னர் அரசியல் குற்றச்சாட்டை எதிர்கொண்டு அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அவரது நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த வாக்காளர்களின் ஆதரவைப் பெற கட்சி உறுப்பினர்கள் யூன் சுக் யோலை கட்சியிலிருந்து விலகும்படி கூறினர்.

இந்நிலையில், மக்கள் சக்தி கட்சி அதிபர் வேட்பாளர் கிம் மூன் சோனை விட ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் லீ ஜெ மியோங் ஆதரவில் முன்னிலை வக்கின்றார்.

அண்மைய கருத்துக் கணிப்பின்படி, சுமார் 29 விழுக்காட்டினர் மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள வேளையில், ஜனநாயகக் கட்சிக்கு 51 விழுக்காட்டு ஆதரவு கிடைத்துள்ளது.

சுதந்திர கொரியாவைப் பாதுகாக்கும் கடமையை நிறைவேற்ற கட்சியிலிருந்து தாம் விலகுவதாகவும், மக்கள் தங்கள் ஆதரவை கிம்மிற்கு தர வேண்டும் என்று யோல் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)