போர்ட் டிக்சன், 17 மே (பெர்னாமா) -- அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களும் கொள்கைகளும் மக்களிடையே, குறிப்பாக இந்தியர்களிடையே சரியாகவும் விரிவாகவும் சென்றடைவதை உறுதி செய்வதில் இந்திய ஊடகவியலாளர்களின் பங்கு அளப்பரியதாக உள்ளது.
அதனைக் கருத்தில் கொண்டு, துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் கழகமான IPPTAR, ஊடகங்களின் வாயிலாக சிறந்த முறையில் மக்களுக்கு தகவல்களை கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன், தமிழ் ஊடக உள்ளடக்கத்தை உருவாக்குவதில் படைப்பாற்றல் மற்றும் புதுமையான பாடநெறி எனும் பயிற்சியை ஏற்று நடத்தியது.
கடந்த மே14 தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெற்ற இப்பயிற்சி, திறன்பேசி ஊடகம், ஊடகத்தில் நெறிமுறைகள் மற்றும் கடப்பாடு உட்பட இலக்கவியல் ஊடகம் என மூன்று பிரிவிகளில் நடத்தப்பட்டது.
தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சிலின் ஆலோசனையில் இப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டதாக, அவ்வமைச்சின் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு பிரிவு துணைத் தலைமைச் செயலாளர் மனோ வீரபத்ரன் கூறினார்.
''அமைச்சர் ஃபஹ்மி ஃபடில் இந்திய ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி அளிக்கும்படி கூறினார். இந்த செய்திகள் அனைத்தும் மக்களை சரியாக சென்றடைய வேண்டும் என்பதுதான் நோக்கம். தற்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அவர்கள் செயல்பட வேண்டும்,'' என்றார் அவர்.
இந்திய ஊடகவியலாளர்களுக்காக முதன்முறையாக நடத்தப்பட்ட இப்பயிற்சி, தற்போதைய கால கட்டத்திற்கு ஏற்ற அம்சங்களை உட்படுத்தி நடத்தப்பட்டதாக IPPTAR-இன் கல்வி பிரிவுத் தலைவர் குமரன் சுப்ரமணியம் விவரித்தார்.
குறிப்பாக, பங்கேற்றவர்களுக்கு ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை முன்னிறுத்தி பல பயிற்சிகளை தங்கள் தரப்பு மேற்கொண்டு வருவதையும் அவர் குறிப்பிட்டார்.
''செயற்கை நுண்ணறிவு கொண்டுவரவிருக்கும் மாற்றங்கள் யாவை, அத்தொழில்நுட்பத்தை ஊடகவியலாளர்கள் எவ்வாறு கையாள வேண்டும், என்னென்ன தொழில்துறைகளில் மனித மூலதனம் குறைந்து போகும் போன்ற விழிப்புணர்வை கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்,'' என்றார் அவர்.
சவால்மிக்க உலகில் ஊடகவியாலாளர்களின் திறனையும் அறிவுசார் நுட்பங்களையும் வளர்த்துக்கொள்ள, ipptar பல்வேறான பயிற்சிகளை நடத்துவதாகவும் ஊடகத்துறையைச் சார்ந்தோர், அதன் அதிகாரப்பூர்வ அகப்பக்கமான www.ipptar.gov.my-இல் உள்ள தகவல்களைக் கண்டறிந்து அதில் பங்கேற்று பயன்பெறவும் அழைப்பு விடுத்தார்.
இதனிடையே, இப்பயிற்சியில் பங்கேற்ற சிலர் தங்களின் அனுபவங்களை பெர்னாமாவிடம் பகிர்ந்து கொண்டனர்.
''திறன்பேசி ஊடகம் குறித்த அதிகமான புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். ஊடகத் துறையில் என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை தெரிந்துகொண்டேன்,'' என்று எவலின் மோசஸ் கூறினார்.
''சமூக ஊடகத்தின் உள்ளடக்கங்களை உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறேன். ஊடகம் என்பது எனக்கு புதிதான ஒன்றுதான். இந்த மூன்று நாள் பயிற்சி எனக்கு பல புதிய நுணுக்கங்களைக் கற்பித்தது. மக்களுக்கு சரியான செய்திகளை கொண்டு சேர்ப்பதில் முறையான கையாடலை பயன்படுத்த வேண்டும் என்பது எனது கடப்பாடு,'' என்று கதிரவன் குணசேகரன் குறிப்பிட்டார்.
நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சனில் 18 பயிற்சியாளர்கள் பங்கேற்ற இம்மூன்று நாள் பயிற்சியில், மலேசிய தேசிய செய்தி நிறுவனமான, பெர்னாமாவின் தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜூ துரைராஜ், ஊடகத்தில் நெறிமுறைகள் மற்றும் கடப்பாடு எனும் பயிற்சியை இரண்டாவது நாளில் வழிநடத்தினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]