புதுடெல்லி, 30 மார்ச் (பெர்னாமா) - மியன்மாரில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு நிலைமையைக் கையாள உதவுவதற்கு 118 நிபுணர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் கள மருத்துவமனையை இந்தியா அந்நாட்டிற்கு அனுப்புவதாக இந்திய வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.
தேடல் மற்றும் மீட்புக் குழு, உணவு, உடைகள் மற்றும் மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களுடன் ஐந்து விமானங்களை இந்தியா நேற்று அந்நாட்டிற்கு அனுப்பி வைத்தது.
"80 மீட்புப் பணியாளர்களைக் கொண்ட NDRF குழு களமிறங்கும். நகர்ப்புற மற்றும் தேடல் மீட்புக் குழுவான இது இரண்டு கட்டமாக அனுப்பப்பட்டுள்ளது. முதல் கட்டக் குழு ஏற்கெனவே புறப்பட்டு விட்டது. இரண்டாவது குழு ஹிண்டன் விமான தளத்திலிருந்து புறப்படவிருக்கிறது. இம்முறை 80 மீட்புப் பணியாளர்களுடன் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து சாதனங்களும் அடங்கிய சிறப்பு உபகரணங்களும் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் பயன்படுத்துவதற்கு உகந்ததாக இருக்கும் மோப்ப நாய்களும் எங்களிடம் உள்ளன,'' என்று தேசிய பேரிடர் பதிலளிப்புப் படையைச் சேர்ந்த டி.ஐ.ஜி மோஹ்சென் ஷாஹெடி தெரிவித்தார்.
நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு நான்கு இந்திய கப்பல்களும் தயாராக உள்ளன.
இப்பேரிடரைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி சனிக்கிழமை மியன்மார் இராணுவ அரசாங்கத்தின் தலைவர் மிங் அவுங் லாயிங்குடன் பேசுகையில், இந்தியாவின் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்து கொண்டார்.
மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் நெருங்கிய நட்புறவைக் கொண்டுள்ளதோடு அண்டை நாடு என்ற அடிப்படையில், மியன்மாருக்கு முழுமையாக உதவிக்கரம் நீட்டும் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)