மண்டலே, 30 மார்ச் (பெர்னாமா) - மியன்மாரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1700-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் தொடரப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை மியன்மாரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவை கருவியில் 7.7-ஆகப் பதிவானது.
அதன் பின்னர், தொடர்ச்சியான நில அதிர்வுகள் பதிவுசெய்யப்படுவதால் குடியிருப்புகளை இழந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கடுமையாக சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழும் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.
2021-ஆம் ஆண்டு ஆங் சான் சூகியின் அரசாங்கத்தை கவிழ்த்து மியன்மார் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
அதனை தொடர்ந்து, இராணுவ ஆட்சியினால் பொருளாதாரம், அரசியல் உட்பட பல சிக்களை அந்நாட்டு மக்கள் சந்தித்து வரும் நிலையில், இந்த இயற்கை பேரிடர் நிலமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இதனிடையே, மியன்மாரில் மையம் கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாய்லாந்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்நாட்டின் தலைநகரமான பேங்காக்கில் கடுமையான சேதங்கள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், இதுவரை 11 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்ததால் அதன் இடிபாடுகளில் 47 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறன்றன.
கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு அதன் வடிவமைப்பு காரணமா என்பதை கண்டறிய தாய்லாந்தின் பொதுப்பணி அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)