கொழும்பு, 06 ஏப்ரல் (பெர்னாமா) -- தாய்லாந்து பயணத்தைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்டை நாடான இலங்கை மண்ணுக்கு வருகை புரிந்துள்ளார்.
தலைநகர் கொழும்புவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் சனிக்கிழமை மோடிக்கு முப்படைகளின் வரவேற்பு நல்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, இலக்கவியல் உள்கட்டமைப்பு உட்பட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
இலங்கை அதிபராக அநுர குமார திசநாயக்க பதவியேற்ற பிறகு, இலங்கைகைக்கு வருகை தந்துள்ள முதல் வெளிநாட்டு தலைவர் மோடி ஆவார்.
முன்னதாக அநுர குமாரவும் பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்குச் சென்றிருந்தார்.
கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் புதுடெல்லியின் செல்வாக்கை ஒருங்கிணைக்கும் முயற்சியில் எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து அனுர குமார திசாநாயக்கவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களை வரவேற்ற மோடி, வங்காளதேசம், மாலத்தீவு மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பில் இரு தரப்பினரும் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.
இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த இராணுவ ஒப்பந்தம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதனிடையே, இந்தியா – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி மோடிக்கு இலங்கையின் உயரிய விருதான மித்ர விபூஷணா விருதை வழங்கி இலங்கை அதிபர் கெளரவித்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)