கோலாலம்பூர், 07 ஏப்ரல் (பெர்னாமா) -- 12-வது ஆசியான் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம், AFMGM, இன்று காலை தொடங்கியது.
இவ்வார இறுதியில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களால் இறுதி செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்து மூத்த அதிகாரிகள் விவாதிக்கத் தொடங்கினர்.
தொடக்க கட்டமாக மலேசியாவின் தலைமையில் ஆசியான் துணை நிதி அமைச்சர்கள் கூட்டம், AFDM மற்றும் ஆசியான் மத்திய வங்கிகளின் துணை ஆளுநர்கள் கூட்டம், ACDM இன்று தொடங்கியது.
AFDM கூட்டத்திற்குக் கருவூலத் தலைமைச் செயலாளர், டத்தோ ஜோஹன் மாஹ்மூட் மெரிகன், தலைமையேற்றதோடு, ACDM கூட்டத்திற்குப் பேங்க் நெகாரா மலேசியாவின் துணை ஆளுநர், டத்தோ மர்சுனிஷாம் ஒமார் தலைமையேற்றார்.
அமெரிக்க கருவூலத்துடனான ஆசியான் நிதி துணை அமைச்சர்கள் மற்றும் ஆசியான் மத்திய வங்கிகள் கூட்டம், AFCDM-உம் இன்று நடைபெற்றது.
கடந்த வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்த வரிகளினால் தொடங்கியிருக்கும் உலகளாவிய வர்த்தகப் போரினால், ஏற்படும் நிதிப் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இன்றும் முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரையில், கோலாலம்பூர் மாநாட்டு மையைத்தில் நடைபெறும் AFMGM கூட்டத்தில், வட்டார நிதி ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)