உலகம்

தோக்கியோ: சுற்றுலாப் பேருந்துகளை உட்படுத்திய விபத்தில் 47 பேர் காயம்

06/04/2025 07:08 PM

தோக்கியோ, 06 ஏப்ரல் (பெர்னாமா) --   ஜப்பான், மேற்கு தோக்கியோ நெடுஞ்சாலையில் இரு சுற்றுலாப் பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 47 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் அதிகமானோர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் ஆவர்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக இரு பேருந்துகளும் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த போது, ​​ஒரு பேருந்து மற்றொரு பேருந்தைப் பின்புறத்தில் இருந்து மோதியதில் இவ்விபத்து நிகழ்ந்தது என்று அமலாக்கத் தரப்பினர் கூறினர்.

ஹச்சியோஜி, சூவோ நெடுஞ்சாலையின், கோபோடோக் சுரங்கப்பாதைக்கு அருகே உள்ளூர் நேரப்படி காலை மணி 10.15 அளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜேஆர் தோக்கியோ நிலையத்திலிருந்து யமனாஷி வட்டாரத்தில் உள்ள கவாகுச்சி ஏரியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அவ்விரு பேருந்துகளும் ஒரே நிறுவனத்தை சேர்ந்தவையாகும்.

இவ்விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படாத அதேவேளையில் யாருக்கும் பலத்த காயங்களும் ஏற்படவில்லை என்பதை அமலாக்கத் தரப்பு உறுதிபடுத்தியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)