பொது

பாதுகாப்பான இணைய பிரச்சாரத்தை தொடர்பு அமைச்சு மேற்கொண்டுள்ளது

19/05/2025 05:40 PM

லங்காவி, 19 மே (பெர்னாமா) - இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் நிலையான இலக்கவியல் சமூகத்தை உருவாக்கவும் வடக்கு மண்டலத்தில் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பான இணையம் எனும் பிரச்சாரத்தை, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம்,எம்சிஎம்சி -உடன் இணைந்து தொடர்பு அமைச்சு மேற்கொண்டுள்ளது. 

வடக்கு மண்டலத்தில் இப்பிரச்சாரத்திற்கான தொடக்க இடமாக கெடா, லங்காவியில் உள்ள உலு மலாக்கா தேசிய வகை பள்ளி அமைந்திருக்கும் நிலையில் கட்டம் கட்டமாக பிற பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி பட்சில் கூறினார். 

லங்காவி மாவட்டம் முழுவதிலும் உள்ள 21 தொடக்க பள்ளிகள் மற்றும் ஏழு இடைநிலைப்பள்ளிகளுக்கும் பாதுகாப்பான இணைய பிரச்சாரம் விரிவுப்படுத்தப்படும் என்று டத்தோ ஃபஹ்மி கூறினார்

“ஒரு தகவலைத் தெரிவிப்பதே இதன் நோக்கமாகும், குறிப்பாக, தொடக்கப்பள்ளி மாணவர்கள் சமூக ஊடங்களில் விளையாட்டுதனத்தை தவிர்ப்பதோடு, சமூக ஊடகம், இணையத்தின் நன்மை மற்றும் ஆபத்துகள் குறித்து பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”  

இன்று கெடா, லங்காவியில் வடக்கு மண்டலத்திற்கான பாதுகாப்பான இணைய பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.

இப்பிரச்சாரம் மற்ற மண்டலங்களிலும் விரிவுப்படுத்தப்படும் நிலையில், இவ்வாண்டு இறுதிக்குள் நாடு முழுவதிலுமுள்ள 10 ஆயிரத்து 200 பள்ளிகளைச் சென்றடையும் என்று ஃபஹ்மி தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)