லங்காவி, 19 மே (பெர்னாமா) - 2025-ஆம் ஆண்டு லங்காவி அனைத்துலக விமானம் மற்றும் கடல்சார் கண்காட்சி LIMA '25-இல் பங்கேற்பதிலிருந்து இந்திய விமானப்படையின் சூர்யகிரண் வான் சாகச குழு விலகிக் கொண்டது.
தற்போது அந்நாட்டில் நிலவி வரும் புவிசார் அரசியல் பிரச்சினைகள் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
"தொடக்கத்தில், இந்தியாவைச் சேர்ந்த வான் சாகச குழுவும் பங்கேற்க விருப்பம் தெரிவித்தது. ஆனால், அவர்களால் தங்கள் விருப்பத்தைத் தொடர முடியவில்லை. காரணம் தற்போதைய சூழ்நிலை. அந்த நாட்டில் உள்ள சவால்கள் நமக்குத் தெரியும்," என்றார் அவர்.
ரஷ்யாவின் Russian Knights மற்றும் இந்தோனேசியாவின் Jupiter உட்பட பல பிரபலமான அனைத்துலக குழுக்களின் பங்கேற்புடன் வான் சாகச நிகழ்ச்சி தொடரப்படும் என்று காலிட் நோர்டின் தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக, முந்தைய ஆண்டுகளை விட, இவ்வாண்டு லீமா கண்காட்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 57 குழுக்கள் பங்கேற்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று, லங்காவியில் உள்ள மஹ்சூரி அனைத்துலக கண்காட்சி மையத்தில் LIMA'25-இன் தயார் நிலை நடவடிக்கைகளை காலிட் நோர்டின் பார்வையிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)