சுங்காய், 19 மே (பெர்னாமா) - கடந்த 40 ஆண்டுகாலமாக அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் வசித்து வந்த சுங்கை சட்டமன்றத் தொகுதியில் உள்ள கம்போங் செங்காய் மற்றும் கோலா பீக்காம் கிராம மக்களுக்கு இன்று நிலப்பட்டா வழங்கப்பட்டது.
இந்தியர்களே அதிகளவில் வசிக்கும் கம்போங் செங்காய் கிராமத்திற்கு நிலப்பட்டா கோரி நீண்டகாலமாக போராட்டங்கள் எழுந்து வந்த நிலையில், இப்போதுதான் அதற்கு விடியல் கிடைத்துள்ளதாக பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.
"அது லாடாங் செங்காய் என்று முன்பு ஒரு தோட்டமாக இருந்தது. அந்தத் தோட்டம் விற்கப்பட்டபோது அங்கு வசித்த பாட்டாளி மக்கள் அருகில் இருந்த சிறிய அளவிலான அரசாங்க நிலத்தில் தற்காலிகமாக குடிபெயர்ந்து அங்கேயே வீடுகட்டி இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். வீடு கட்டிக் கொண்டாலும் அந்த நிலம் அவர்களுக்கு சொந்தமற்றதாக இருந்தது. 40 ஆண்டுகளாக இப்பிரச்சனை தொடர்ந்து நீடித்து வந்தது. இதைத் தொடர்ந்து ஜேகேஆரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாநில அரசாங்கம் அந்த நிலத்தை மீட்டு இன்று 32 குடும்பங்களுக்கு நிலப்பட்டா வடிவில் வழங்கியுள்ளது," என்று அவர் விவரித்தார்.
அதேபோல தெலுக் இந்தான் செல்லும் வழியில் உள்ள கம்போங் பாரு கோலா பீக்காம் என்ற கிராமத்திலும் நிலப்பட்டா பிரச்சனை தலைத்தூக்கி வந்த வேளையில், அதற்கும் இவ்வாண்டு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளதாக சிவநேசன் குறிப்பிட்டார்.
"அங்குள்ள 52 குடும்பங்களுக்கும் இதே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அங்கும் அவர்கள் வீடு கட்டிக் கொண்டார்கள். ஆனால் நிலம் அவர்களுக்கு சொந்தமாகவில்லை. அங்குள்ள மக்களும் 40,50 ஆண்டுகளாக இதே பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த ஆண்டுதான் அவர்களின் பிரச்சனை தீர்ந்து நிலப்பட்டா கிடைத்தது," என்றார் அவர்.
இவ்விரு கிராமங்களுக்கும் நிலப்பட்டா வழங்கியதைத் தொடர்ந்து SUNGKAI சட்டமன்றத் தொகுதியில் வாழும் மக்களின் நிலப்பட்டா பிரச்சனைகளுக்கு முழுமையாக தீர்வு காணப்பட்டுள்ளதாக அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் கூறினார்.
பீடோரில் ஒன்பது லட்சம் ரிங்கிட் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் முஹிபா மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், அவ்விரு கிராம மக்களுக்கும் சிவநேசன் நிலப்பட்டாக்களை வழங்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)