பொது

கையூட்டு குற்றச்சாட்டை மூத்த போலீஸ் அதிகாரி மறுத்தார்

19/05/2025 05:09 PM

கோத்தா பாரு, 19 மே (பெர்னாமா) --    ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 13,000 ரிங்கிட் கையூட்டு பெற்றதாக தம் மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை ஏ.எஸ்.பி பதவிக் கொண்ட மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், இன்று கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.

மாச்சாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவராக பணியாற்றிய 40 வயது முஹமட் ஃபிர்டாவுஸ் முஹமட், ஒப்பந்ததாரர் ஒருவரிடமிருந்து மதிப்புள்ள பொருளைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.

பாச்சோக், கம்போங் பாக் எலோங் தெலொங், Lot 2822-இல் உள்ள முஹமட் ஃபிர்டாவுசின் வீட்டை 9,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்பில் அந்த ஒப்பந்ததாரர் இலவசமாக புதுபித்துள்ளார்.

4,500 ரிங்கிட் மதிப்புள்ள அதிக சக்தி கொண்ட மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக அதே நபரிடமிருந்து வைப்புத்தொகையைப் பெற்றதாக அவர் மீது இரண்டாவது குற்றம் பதிவாகியது.

2018-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை பச்சோக்கில் உள்ள தனது வீட்டிலும், 2018-ஆம் ஆண்டு ஜனவரியில் மச்சாங் போலீஸ் தலைமையகத்திலும் முஹமட் ஃபிர்டாவுஸ் அவ்விரு செயல்களையும் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 165-இன் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

8,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் ஒருவர் உத்தரவாதத்தின் பேரில் முஹமட் ஃபிர்டாவுஸ் விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு ஜூன் 23-ஆம் தேதி நடைபெறும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)