பொது

எஸ்.பி.ஆர்.எம்-இன் நடவடிக்கைகளை வலுப்படுத்த கணக்கியல் மோசடி பணிக்குழு உருவாக்கம்

19/05/2025 04:45 PM

கோலாலம்பூர், 19 மே (பெர்னாமா) --    பெருநிறுவனங்கள், பொது நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட சிக்கலான மற்றும் உயர்மட்ட ஊழல் மற்றும் நிதி முறைகேடுகளைக் கையாளும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம்-இன் நடவடிக்கைகளை வலுப்படுத்த கணக்கியல் மோசடி பணிக்குழு, கே.கே.எஃப்.பி நிறுவப்பட்டிருக்கிறது.

கணக்கியல் மோசடி மற்றும் தேசிய சொத்துக்களின் இழப்பைத் தடுக்கும் முயற்சிகளில் நாட்டில் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும் என்று எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

நிதி மோசடி வழக்குகளைக் கண்டறிதல், ஆய்வு செய்தல் மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் நாட்டில் தற்போதுள்ள நிபுணர்களை மிகவும் திறம்படப் பயன்படுத்துவதற்கான ஒரு வியூக முயற்சியாக கே.கே.எஃப்.பி நிறுவப்பட்டுள்ளதை டான் ஶ்ரீ அசாம் பாக்கி சுட்டிக்காட்டினார்.

"எஸ்.பி.ஆர்.எம் தனியாகச் செயல்படுகிறது என்பதையும், சில சமயங்களில் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகள் போன்ற சில வழக்குகளில் நிபுணர்களாக இருக்கும் வெளி தரப்புகளுடன் நாங்கள் ஈடுபடுகிறோம் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். எங்களுக்கு உதவ ஆலோசகர்களை நாங்கள் நியமிக்கிறோம். ஆனால் நமது நாட்டில் வளங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாகத் தேசிய தணிக்கை தலைவர், எஸ்.எஸ்.எம் கல்விக் கழகம், யு.ஆர்.தி.எம், எம்.ஆர்.ஏ மற்றும் பலவற்றில் ஏற்கனவே நிபுணர்கள் உள்ளனர். அதிக நம்பகத்தன்மை கொண்டவர்களாகவும் உள்ளனர்", என்றார் அவர்.

திங்கட்கிழமை, கோலாலம்பூரில் நடைபெற்ற கே.கே.எஃப்.பி அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

முன்னர், வெளிநாட்டு நிபுணர்களைச் சார்ந்திருந்த விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த ஒத்துழைப்பு வழிவகுப்பதாக டான் ஸ்ரீ அசாம் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)