பொது

நடுவர் துறையில் சட்ட ஒத்துழைப்பை வலுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

19/05/2025 03:58 PM

தோக்கியோ, 19 மே (பெர்னாமா) --   நடுவர் துறையில் சட்ட ஒத்துழைப்பை வலுப்படுத்த ஆசிய உலக நடுவர் மையம், ஏ.ஐ.ஏ.சி மற்றும் ஜப்பான் நடுவர் சங்கம், ஜே.எ.எ இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கடந்த 15-ஆம் தேதி தொடங்கி ஜப்பானுக்கு மூன்று நாள்கள் அலுவல் பயணம் மேற்கொண்ட சட்டம் மற்றும் கழகச் சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

வணிக நடுவர் மன்றம், திறன் மேம்பாடு, ஏ.ஐ.ஏ.சி மற்றும் ஜே.எ.எ இடையிலான கூட்டு பயிற்சிகள் ஆகியவற்றில் ஒத்துழைப்புகள் மேற்கொள்ளும் முயற்சியாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செயலாற்றும் என்று பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு, பியூயு தெரிவித்திருக்கிறது

அடுத்த ஆகஸ்ட் மாதம் நடைபெறும் அமைச்சர்கள் அளவிலான மலேசியா-ஜப்பான் சிறப்பு சட்ட ஒத்துழைப்பு கலந்துரையாடலின் போது, இந்த ஒப்பந்தம் வலுப்படுத்தப்படும் பியூயு குறிப்பிட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இரு நாடுகளின் அரசாங்கங்கள் அங்கீகாரம் வழங்கிய நடுவர் நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளன.

சட்ட ஒத்துழைப்பில் பெறப்படும் உண்மையான வெற்றி, செயல்பாட்டால் தீர்மானிக்கப்படுவதை மலேசியாவும் ஜப்பானும் ஒப்புக்கொண்டிருப்பதாக அசாலினா சுட்டிக்காட்டியுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)