கோலாலம்பூர், 06 மே (பெர்னாமா) - தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலகட்டத்திலேயே உயிரோட்டமான வசனங்கள், ஆவலைத் தூண்டும் பின்னணி இசை, எடுப்பான ஒலிக்கூறுகள், இரைச்சலற்ற பின்னணி குரல்கள் என்று வானொலி நாடகத்தின் வழி தமக்கென தனியோர் அடையாளத்தைக் கொண்டிருந்த தயாரிப்பாளரும் எழுத்தாளருமான எஸ்.வைரக்கண்ணு இன்று காலமானார்.
80-ஆம் ஆண்டுகளில் மலேசியா வானொலியான ரங்காயான் மேரா மூலம் திகில், மர்மம் நிறைந்த வானொலி நாடகங்களை எழுதுவதில் புகழ்ப்பெற்ற வைரக்கண்ணுவிற்கு வயது 72.
பேராக், தெலுக் இந்தான், கோலா பெர்ணம் தோட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், தமது 18-ஆவது வயது முதல் எழுத்துலகில் கால் பதிக்கத் தொடங்கினார்.
வானொலி நாடகம் மட்டுமின்றி தமது அத்தனைப் படைப்புகளின் பின்னணியிலும், ஏதாவதோர் வசனத்திலோ அல்லது காட்சியிலோ தம்மையும் லாவகமாக தொடர்பு படுத்தி அந்நாடகத்தை வித்தியாசப்படுத்தும் ஆற்றலும் வைரக்கண்ணுவிடம் மிகுதியாகவே இருந்தது.
நாடகத்தின் இடையே விக்ரம் ராம்பாபு போன்ற புனைப்பெயர்களில், பத்திரிகைகளிலும் சிறுகதை எழுதி வந்தார்.
அதிலும்,1978-ஆம் ஆண்டில் மறைந்த ஆதி. குமணன் ஆசிரியராக இருந்து வெளிவந்த வானம்பாடி வார இதழில் 'ஹாலே ராம்பாபு' என்ற திகில் தொடர்கதையை எழுதி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தினார்.
எழுத்து, தயாரிப்பு என்றில்லாமல், நடிப்பிலும் அலாதி ஆர்வம் உடைய வைரக்கண்ணு, தமது நாடகம் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக கால நேரம் பார்க்காமல் ஒரே காட்சியை எத்தனை முறை வேண்டுமானாலும் அலுப்பின்றி நடித்து காட்டக் கூடிய பக்குவம் உடையவர் என்று அவரின் நெருங்கிய நண்பர்கள் சிலர் தெரிவித்தனர்.
"தாம் எழுதிய நாடகம் தனித்துவம் பெற கடுமையாகப் பாடுபடக்கூடியவர். ஒலிப்பதிவு வேளையில், அனைத்தையும் கண்காணிப்பதோடு கலைஞர்களும் நடிப்புப் பயிற்சி வழங்குவதிலும் வல்லவர் அவர். அவரின் மறைவு என்னைப் போன்ற மூத்த கலைஞர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றே சொல்ல வேண்டும்," மூத்த வானொலி நடிகர் கே.எஸ்.மணியம் தெரிவித்தார்.
"அவரின் படைப்புகள் மாறுபட்டனவாக இருக்கும். மர்ம நாடகம் மட்டுமின்றி அறிவியல் நாடகங்கள் எழுதுவதிலும் அவர் வல்லவர். ஒலிபரப்பு அறையில் நாடகக் கலைஞர்களை அவர் வேலை வாங்கும் விதமே பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். கலைஞர்களின் திறமைகளை முழுமையாக பயன்படுத்தக்கூடியவர்," என்று மூத்த வானொலி நாடக தயாரிப்பாளர் சந்திரா சூரியா தெரிவித்தார்.
வானொலியின் முன்னாள் அறிவிப்பாளரான குளோரியா நிர்மலாதேவியை கரம் பிடித்த வைரக்கண்ணுவிற்கு கேவின், அரோனா, ஏபா என்ற மூன்று மகன்களும், ஆரணியா என்ற ஒரு மகளும் உள்ளனர்.
நாளை காலை மணி பத்து அளவில் செமினி கிறிஸ்துவ கல்லறையில் அன்னாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரின் மூத்த புதல்வர் கேவின் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)