பொது

எஸ்எஸ்டி வழிகாட்டுதல் இன்னும் ஆய்வு நிலையிலே உள்ளது

29/04/2025 04:57 PM

கோலாலம்பூர், 29 ஏப்ரல் (பெர்னாமா) - எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரியின் நோக்கத்தை விரிவுபடுத்தும்  வழிகாட்டுதல்களின் விவரங்கள், இன்னும் ஆய்வு நிலையிலே உள்ளதாக நிதி துணை அமைச்சர் லிம் ஹுய் இங் தெரிவித்தார்.

அந்த விரிவாக்கம் இறுதி செய்யப்படுவதற்கு முன்னர், அது தொடர்பான விவரங்களை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் ஒரு கலந்தாலோசிப்பை நடத்த,
 நிதி அமைச்சு செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

"எஸ்எஸ்டி-இன் நோக்கம் குறித்த வழிகாட்டுதல்கள் தொடர்பிலான விவரங்களை நிதியமைச்சு இன்னும் ஆராய்ந்து வருகிறது. மேலும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்கும் செயல்முறையிலும் நாங்கள் இருக்கிறோம். எனவே இது குறித்த மேல் விவரங்கள் இருந்தால், நிதி அமைச்சு ஓர் அறிவிப்பை வெளியிடும்," என்றார் அவர்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு  தேசிய அளவிலான E-Invois கண்காட்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.  

SST நோக்க விரிவாக்கம் மற்றும் அதன் விகித திருத்தங்களின் இறுதிப் பட்டியலை இவ்வாண்டின் முதல் காலாண்டில் வெளியிடுவதாக நிதியமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)