விளையாட்டு

சூப்பர் லீக் கிண்ணம்; ஶ்ரீ பகாங் தொடர்ச்சியாக வெற்றி

13/04/2025 06:38 PM

மஞ்சோங், 13 ஏப்ரல் (பெர்னாமா) -- மலேசிய சூப்பர் லீக் கிண்ண காற்பந்து போட்டி நேற்றிரவு மஞ்சோங் நகராண்மைக் கழக அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஶ்ரீ பகாங் 1-0 என்ற நிலையில் பேராக் அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது.

இம்மாத இறுதியில் மலேசிய கிண்ண இறுதிப் போட்டி நடைபெறவுள்ள வேளையில், இந்த வெற்றி ஶ்ரீ பகாங் அணிக்கு நேர்மறையான உற்சாகத்தை வழங்கியுள்ளது.

முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்த வேளையில், இரண்டாம் பாதியில் ஶ்ரீ பகாங் அணிக்கு தி. சரவணன் களமிறக்கப்பட்டார்.

அதில், தாக்குதல் பகுதி விளையாட்டாளரான தி. சரவணன் 82-வது நிமிடத்தில் அவ்வணியின் ஒரே கோலை அடித்தார்.

இந்த பருவத்தில், ஒன்பது தோல்விகளோடு எட்டு சமநிலை முடிவுகளைப் பெற்றிருக்கும் ஶ்ரீ பகாங்கிற்கு இது ஆறாவது வெற்றியாகும்.

இதன் வழி, 26 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் அக்குழு ஒன்பதாவது இடத்தில் உள்ளது

அடுத்த வாரம் சனிக்கிழமை பினாங்குடன் தெமர்லோவில் விளையாடும்.

இதனிடையே, சொந்த இடமான அலோர் ஸ்டார், டாருல் அமான் அரங்கில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கில் களமிறங்கிய கெடா 1-1 என்று சபாவுடன் சமநிலை கண்டது.

கெடாவின் ஒரே கோல், 16-வது நிமிடத்தில் பினால்டி வாய்ப்பின் வழி முஹமட் அமிருல் ஹிசாம் அவாங் கெசிலால் அடிக்கப்பட்டது.

அதேபோல, சபாவின் ஒரே கோல் இரண்டாம் பாதியின் 60-வது நிமிடத்தில் போடப்பட்டது.

மற்றுமொரு நிலவரத்தில், செலாயாங் நகராண்மைக் கழக அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் PDRM அணி 1-0 எனும் கோலில் திரெங்கானுவை வீழ்த்தியது.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)