பொது

பாலியல் பிரச்சனைகளை களைவதில் கல்வி அமைச்சு உறுதி

13/04/2025 05:07 PM

தைப்பிங், 13 ஏப்ரல் (பெர்னாமா) -- நாட்டில் அனைத்து கல்வி கழக மாணவர்களிடையே ஏற்படும் பாலியல் பிரச்சனைகளை களைவதில் கல்வி அமைச்சு உறுதியாக உள்ளது. 

இணைய பாதுகாப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளைத்  தீர்ப்பதிலும், இரத அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுடன் கல்வி அமைச்சு ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறியுள்ளார். 

இன்று பேராக், தைப்பிங்கில் 2025 ஆம் ஆண்டின் தேசிய அளவிலான #terimakasihcikgu நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்,

இந்நிகழ்ச்சிக்கு, கல்வி துணை அமைச்சர் வொங் கா வோ மற்றும் மலேசிய கல்வி இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் ஆகியோரும் வருகை புரிந்திருந்தனர். 

பாலியல் தொந்தரவு புகார்கள் தொடர்பில், தனியார் பள்ளிகள் சிறந்த செயல்பாட்டு தர விதிமுறைகள் SOP-யைக் கொண்டிருக்க வேண்டும் என்று தொடர்பு துணை அமைச்சர் நேற்று கூறியிருந்தார். 

அதில், செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆபாசப் படங்கள் பற்றிய புகார்களும் அடங்கும்.

அண்மையில், ஜோகூர், கூலாயில் உள்ள தனியார் இடைநிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவரின் புகைப்படம் ஆபாச புகைப்படமாக மாற்றப்பட்டு சமூக ஊடங்களில் விற்கப்பட்ட சம்பவம் குறித்து அவர் அவ்வாறு கருத்துரைத்திருந்தார். 

அதேவேளையில், இச்சம்பவம் தொடர்பில் 22 புகார்களை தங்கள் துறை பெற்றுள்ளதாகவும், அதில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 16 வயது இளைஞன் ஒருவன் வரும் செவ்வாய்க்கிழமை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம் குமார் கூறியிருந்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)