விளையாட்டு

மலேசிய சூப்பர் லீக்: 9 கோல்கள் அடித்து ஜே.டி.தி அபாரம்

11/04/2025 07:51 PM

இஸ்காண்டார் புத்ரி, 11 ஏப்ரல் (பெர்னாமா) --  மலேசிய சூப்பர் லீக் கிண்ண காற்பந்து போட்டியில், ஜோகூரின் ஜே.டி.தி  9-0 என்ற கோல் எண்ணிக்கையில் கிளந்தானை யை தோற்கடித்து அதிரடி படைத்துள்ளது. 

அதில், முதல் பாதி ஆட்டத்தில் ஐந்து கோல்களை அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஜே.டி.தியின் தாக்குதல் ஆட்டக்காரர் பெர்க்சன் டா சில்வா.

சொந்த மண்ணில் விளையாடிய ஜே.டி.தி டா சில்வா மூலம் எட்டாவது நிமிடத்திலேயே தனது கோல் வேட்டையைத் தொடங்கியது. 

20-வது நிமிடத்தில் அதன் இரண்டாம் கோல் போடப்பட்டது.

கிளந்தான் தற்காப்பு அரண் பலவீனமானதை நன்கு அறிந்துகொண்ட டா சில்வா. 25 மற்றும் 27 -வது நிமிடங்களில் அணியின் மேலும் இரு கோல்களைப் போட்டார்.

பின்னர், 37-வது நிமிடத்தில் ஐந்தாவது கோலை டா சில்வா அடித்தபோது, ஜே.டி.தி  அரங்கமே உற்சாகத்தில் அதிர்ந்தது.  இந்த பருவத்தில், அவருக்கு இது 31 கோலாகும். 

முதல் பாதியை, டா சில்வா ஆக்கிரமித்திருந்த வேளையில், இரண்டாம் பாதி ஆட்டத்தில்  
ரோமல் மொரலஸ் தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். 

அதன் பலனாக, அணியின் ஆறு மற்றும் ஏழாவது கோல்களை அவர் , 55 மற்றும் 58-வது நிமிடங்களில் போட்டார்.

ஜே.டி.தி யின் எஞ்சிய இரு கோல்கள்  ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் அடிக்கப்பட்ட வேளையில், பட்டியலில் முதலிடத்தில் உள்ள அவ்வணி விரைவில் இவ்வாண்டுக்கான கிண்ணத்தைக் கைப்பற்றும்.

-- பெர்னாமா