பொது

சீன அதிபர் வருகை; முக்கிய சாலைகள் மாற்றுப் பாதைகளுக்கு திருப்பி விடப்படும்

13/04/2025 06:38 PM

கோலாலம்பூர், 13 ஏப்ரல் (பெர்னாமா) -- சீனா அதிபர் ஸி ஜின்பிங் மலேசியாவிற்கு மூன்று நாள்கள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்வதை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் புத்ராஜெயாவைச் சுற்றியுள்ள பல சாலைகள் முழுமையாக மூடப்படும் அல்லது போக்குவரத்து கட்டம் கட்டமாக மாற்றுப் பாதைகளுக்கு திருப்பி விடப்படும்.

சீன பிரதிநிதி குழுவின் பயணங்களைக் கவனத்தில் கொண்டு, 30 முதல் 45 நிமிடங்கள் வரை தற்காலிகமாக மூடப்படும் 17 சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை JSPT-இன் இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.

ஏப்ரல் 15 ஆம் தேதி மாலை மணி 6 தொடங்கி மூடப்படும் சாலைகளில் KLIA நெடுஞ்சாலை, வடக்கு-தெற்கு ELITE நெடுஞ்சாலை, புத்ராஜெயா சாலை, புத்ராஜெயா - டெங்கில் நெடுஞ்சாலை, Persiaran Selatan, Lebuh Gemilang மற்றும்
Jalan P5 ஆகியவை அடங்கும்.

சீன பிரதிநிகள் குழு அடுத்த இடத்திற்கு செல்லும் வகையில், அதே நாளில் பிற்பகல் மணி 12.30 தொடங்கி, இரண்டாம் முறை அந்த சாலைகள் மூடப்படும்.

மறுநாள் ஏப்ரல் 16-ஆம் தேதி மாலை மணி 4.10 அளவில், Jalan P5, Lebuh Gemilang, Jalan Tunku Abdul Rahman, Lebuh Sentosa, Lebuh Perdana Barat, மற்றும் Persiaran Seri Perdana சாலைகள் மூடப்படும் வேளையில்..

மாலை மணி 6.30 அளவில் குறிப்பிடப்பட்ட அதே சாலைகள் மீண்டும் மூடப்படும்.

17-ஆம் தேதி காலை மணி 8.50-க்கு, சீன பிரதிநிதிகள் குழு புத்ராஜெயாவிலிருந்து புறப்பட்டு, Jalan P5, Lebuh Gemilang, Persiaran Selatan, Putrajaya–Dengkil நெடுஞ்சாலை, Lingkaran Putrajaya, வடக்கு-தெற்கு ELITE நெடுஞ்சாலை மற்றும் KLIA நெடுஞ்சாலை ஆகிய வழிகளில் பயணிப்பர்.

சாலைகள் மூடப்படும் நேரங்களைக் கருத்தில்கொண்டு, நெரிசலைத் தவிர்க்க, பொதுமக்கள் தங்கள் பயணங்களைச் சரியாக திட்டமிடவும், மாற்று வழிகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)