பத்து விழுக்காடு வரி: ஏற்றுமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் அல்ல

12/04/2025 05:18 PM

கோலாலம்பூர், 12 ஏப்ரல் (பெர்னாமா) -- அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்திருக்கும் வரி விதிப்பு, உலக நாடுகளிடையே வர்த்தக ரீதியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடக்கத்தில் புதிய பரஸ்பர வரியை அறிவித்திருந்த அவர், பின்னர் அதை ஒத்தி வைப்பதாகவும், அடுத்த மூன்று வாரங்களுக்கு பத்து விழுக்காடு வரி மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் பொது அறிவிப்பு செய்திருந்தார்.

டிரம்பின் அந்த திடீர் அறிவிப்பானது, ஏற்றுமதி செய்யப்படுகின்ற அனைத்து பொருட்களுக்கும் வரி விதிக்கப்படும் என்று அர்த்தமாகாது.

மாறாக, அதைவிட குறைவான வரி வசூலிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக விவரிக்கிறார் வரிக்கணக்காளர் ரெங்கநாதன் கண்ணன்.

இந்த வரி விதிப்பில் நிறைய மதிப்பீட்டு முறைகள் இருப்பதால், ஏற்றுமதியாகும் அனைத்து விதமான பொருட்களுக்கும் 10 விழுக்காடு வரி விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று ரெங்கநாதன் கண்ணன் தெளிவுப்படுத்துகின்றார்.

''இதில் நிறைய மதிப்பீட்டு முறைகள் உள்ளன. ஏற்றுமதி செய்யப்படுகின்ற எல்லா பொருட்களுக்கும் 10 விழுக்காடு வரி வரும் என்று அவசியம் இல்லை. அதனைவிட குறைவாக வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால், இதில் நிறைய இயக்கமுறைகள் உட்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, மதிப்பீட்டு முறைகள், ஏற்றுமதி அளவுக்கோல், தளவாடங்கள் என்று நிறைய விசயங்கள் உள்ளது. அதனால், 10 விழுகாட்டை விட குறைவாக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது,'' என்றார் அவர்.

இதனிடையே, ஏற்றுமதி நடவடிக்கையில் அனைத்து செயல்முறைகளையும் கருத்தில் கொண்டப் பின்னரே, வரி விதிக்கப்படுவதை அவர் உதாரணத்துடன் விளக்கினார்.

''உதாரணத்திற்கு, வெட்டுமரத்தின் விலையும், நாம் இங்கிருந்து அனுப்பக்கூடிய பொருட்களின் விலையும் ஒரே விலையாக இருக்காது. இங்கிருந்து பொருட்களை என்ன விலைக்கு அனுப்புகிறோமோ, அங்கு பெறும் புள்ளியில் (receiving point) என்ன விலைக்கு வருகிறதோ, அதில் அனைத்து செயல்முறைகளையும் கருத்தில் கொண்டு, அதில் இருந்து வரி விதிப்பார்கள். எனவே, 10 விடுகாட்டிற்கு குறைவாகதான் வரியை விதிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது,''

அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பான விளக்கமளிப்பில் ரெங்கநாதன் அதனைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)