நிங்போ, 11 ஏப்ரல் (பெர்னாமா) -- சீனாவின் நிங்போவில் நடைபெற்று வரும் ஆசிய பொது பூப்பந்து போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில், மலேசியாவின் அரையிறுதி வாய்ப்பு காணல் நீரானது.
காலிறுதி ஆட்டத்தில், நாட்டின் கோ சூன் ஹுவாட் - ஷெவோன் லை ஜெமி ஜோடியினர், இந்தோனேசிய இணையிடம் நேரடி செட்களில் தோல்வி கண்டனர்.
இந்தோவின் ஜாஃபர் ஹிடாயத்துல்லா- பெலிஷா பசாரிபு உடன் இன்று பிற்பகலில் களம் கண்ட கணவன் மனைவி தம்பதியான சூன் ஹுவாட் - ஷெவோன் ஜோடி
முதல் செட்டில் 15-21 என்ற நிலையில் தோல்வி கண்டது.
இரண்டாம் செட்டில், அவர்கள் மீண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்த வேளையில், 11-21 என அந்த ஜோடி மீண்டும் தோல்வி தழுவி போட்டியில் இருந்து வெளியேறியது.
ஜனவரியில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ், கடந்த மாதம் அகில இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து பொது பூப்பந்து போட்டிகளுக்குப் பிறகு, இந்த பருவத்தில் சூன் ஹுவாட் - ஷெவோன் இணை காலிறுதியில் வெளியேற்றப்படுவது இது நான்காவது முறையாகும்.
இருப்பினும், ஆசிய பொது பூப்பந்து போட்டியில் மலேசியா இன்னும் ஆட்டக்களத்தில் உள்ளது.
ஆடவர் இரட்டையர் பிரிவில், கோ ஸே ஃபெய் - நூர் இசுடின் முகமட் ரம்சானி மற்றும் ஆரோன் சியா- சு வூய் யிக் ஜோடிகள் இன்றிரவு நடைபெறும் போட்டியில் களமிறங்குவார்கள்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)