பொது

பேராக்கில் 26  இந்திய தொழில்முனைவோருக்கு SMIBA விருது வழங்கி கௌரவிப்பு

06/04/2025 08:19 PM

ஈப்போ, 06 ஏப்ரல் (பெர்னாமா) - பேராக் மாநிலத்தில் உள்ள தொழில்முனைவோரின் வளர்ச்சியினை அடையாளப்படுத்தவும்,அவர்களை ஊக்குவிக்கவும், SMIBA என்ற அமைப்பு ஆண்டுதோறும் பல தொழில்முனைவோரை கௌரவித்து வருகிறது.

இவ்விருது வழங்கத் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்த வேளையில், இதுவரை நான்காயிரம் பேர் தங்கள் அமைப்பின் விருதினைப் பெற்றுள்ளதாகக் கூறிய, SMIBA நிறுவன தலைவருமான மாலா பிரகாசம்...

இவ்வாண்டு 26 இந்திய தொழில்முனைவோருக்கு விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்திய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்துறை வர்த்தகத்தின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதோடு, வருங்கால தொழில்முனைவோருக்கு இவர்களே சிறந்த உதாரணமாவதால் இத்தகையோரை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கியதாக மாலா பிரகாசம் கூறினார்.

"பல ஆய்வுகளை மேற்கொண்டே தகுதி பெற்றவர்களுக்கு நாங்க்ள் இந்த விருதை வழங்குகிறோம். இதில் பலர் நீண்டகாலமாக வர்த்தகத் துறையில் ஈடுபட்டு வந்தாலும் ஒரு முறை கூட அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படவில்லை. அத்தகையோருக்கு இத்தகைய விருது மிகப் பெரிய அங்கீகாரமாக விளங்கும்," என்று மாலா பிரகாசம் கூறுகிறார்.

பேராக் மாநிலத்தில் மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அனைத்துலக அளவிலான இந்திய வர்த்தகர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறமையை ஊக்குவிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்படுவதாக மாலா குறிப்பிட்டார்.

நேற்று ஈப்போவில் உள்ள ஏ.கே.எஸ். மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இவ்விருது விழாவில் மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி வீரையா சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)