பொது

உயர்க்கல்வி மாணவர்கள் இயங்கலை மூலமாக கல்வி கற்க அனுமதி

06/04/2025 06:26 PM

சுபாங் ஜெயா, 06 ஏப்ரல் (பெர்னாமா) --   புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உயர்க்கல்வி மாணவர்கள், திங்கள்கிழமை முதல் இயங்கலை மூலமாக கல்வி கற்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி, பாலிடெக்னிக் மற்றும் Kolej Komuniti-யைச் சேர்ந்த மாணவர்களும் இதே முறையைப் பின்பற்றலாம் என்று உயர்க்கல்வி தலைமை இயக்குநர் முனைவர் டத்தோ டாக்டர் அஸ்லிண்டா அஸ்மான் தெரிவித்தார்.

''இயங்கலை வாயிலாக வகுப்புகள் நடைபெறும். எனவே மாணவர்களின் இலகுத்தன்மைக்காக பொதுப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. மேலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இது நூறு விழுக்காடு முழுமையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை முன்னிறுத்தி அவர்கள் கல்வியில் கவனம் செலுத்தாமல் போய்விடக்கூடாது என்பதால்தான்'', என்று அவர் கூறினார்.

இன்று, புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியிருக்கும் உயர்க்கல்வி மாணவர்களுக்கு உதவிநிதி வழங்கிய பின்னர் டத்தோ டாக்டர் அஸ்லிண்டா அஸ்மான் அவ்வாறு கூறினார்.

அச்சம்பவத்தில் உயர்க்கல்விக்கழக மாணவர்கள் 65 பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகி உள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)