பொது

புத்ரா ஹைட்ஸ்; சாட்சிய பதிவுக்கு 118 பேர் அழைப்பு

06/04/2025 06:21 PM

சுபாங் ஜெயா, 06 ஏப்ரல் (பெர்னாமா) --   புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி சாட்சிய பதிவிற்காக மொத்தம் 118 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில், 15 பேர் குத்தகை நிறுவனத்தைச் சேர்ந்த சாட்சிகள் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

சம்பவத்திற்கான காரணம் குறித்து அறிவதே விசாரணை அறிக்கையின் முதன்மை நோக்கமாக உள்ளது.

எனவே, இவ்விவகாரம் தொடர்பில் சாட்சியமளித்த எந்தவொரு தரப்பினர் அல்லது நிறுவனத்தின் பெயரினை வெளியிட வேண்டிய அவசியம் தமது தரப்பிற்கு இல்லை என்றும் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

''தற்போது பாதிக்கப்பட்ட இடமே எங்களின் முதல் கவனமாக உள்ளது. அதைவிடுத்து யார் இதில் உட்படுத்தப்பட்டிருப்பார் என்று விமர்சிப்பதல்ல. அதனால்தான் நாங்கள் விசாரணையில் அதிகம் கவனம் செலுத்துகிறோம். அதில் இன்னும் எந்த குற்றவியலையும் நாங்கள் வகைப்படுத்தவில்லை. அதனால்தான் விசாரணை அறிக்கையின் கீழ் போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அங்கு தனி நபர்களை விசாரணைக்கு அழைக்கவும் தகவல் பெறவும் போலீசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே இச்சம்பவத்தை தொடர்பில் யாரையும் குறை கூற முடியாது'', என்று அவர் கூறினார்.

இன்று சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.

அதேவேளையில், புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் மொத்தம் 219 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 220 வீடுகள் பாதிப்பின்றி பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹுசேன் ஒமார் கான் தெரிவித்திருக்கின்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)