சுபாங் ஜெயா, 04 ஏப்ரல் (பெர்னாமா) - சிலாங்கூர், சுபாங் ஜெயா புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்களின் இலக்கவியல் சாதனங்களை மாற்றுவதற்கான விண்ணப்பத்தை மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகத்தில் செய்து கொள்ளலாம்.
தற்காலிக நிவாரண மையம், பிபிஎஸ்-இல் தங்கியிருக்கும் குடியிருப்பாளர்களின் இலக்கவியல் சாதனங்கள் சேதமடைந்திருப்பது குறித்த பல்வேறு புகார்களைத் தங்கள் தரப்பு பெற்றுள்ளதாக, இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ கூறினார்.
''தற்போது பிபிஎஸ்சில் தங்கியிருக்கும் பெரும்பாலானோர், தங்களின் இலக்கவியல் சாதனங்கள் வெடிப்பு சம்பவத்தில் சேதம் அடைந்ததாக தெரிவித்தனர். எனவே, அந்த சாதனங்களை எவ்வாறு மாற்றி வழங்குவது குறித்த பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். இது விவாதத்தில் உள்ள ஒரு விஷயம். அடுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அது குறித்து நாங்கள் அறிவிப்போம் என்று நம்புகிறேன். ஆனால் உதவி தேவைப்படுபவர்கள், குறிப்பாக சாதனத்தை மாற்றுவதற்கு, மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். கூடிய விரைவில் அதனை சரிசெய்வோம்,'' என்றார் அவர்.
இன்று, சுபாங் ஜெயா புத்ரா ஹைட்சில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அதனை கூறினார்.
புத்ரா ஹர்மோனி செக்ஷன் 1/3-இல் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தைப் பார்வையிட அழைத்து செல்வதற்கு முன்னதாக, சம்பவகட்டுப்பாட்டு மையம், பிகேடிகே-இல் அண்மைய நிலவரங்கள் குறித்தும் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுவது மட்டுமின்றி, அவர்களின் சுமையைக் குறைப்பதிலும் அமைச்சு தற்போது கவனம் செலுத்தி வருவதாக கோபிந் மேலும் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)