வாஷிங்டன் டீ.சி, 03 ஏப்ரல் (பெர்னாமா) -- அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அனைத்து நாடுகளுக்கும் 10 விழுக்காடு அடிப்படை வரி விதிப்பை அறிமுகப்படுத்துவதாக நேற்று அறிவித்தார்.
அதில், மலேசியா உட்பட சில நாடுகளுக்கு உயர் வரி விகிதம், அதாவது 24 விழுக்காடு வரை விதித்துள்ளார்.
கனடா மற்றும் மெக்சிக்கோவைத் தவிர, இதர அனைத்து நாடுகளுக்கும் குறைந்தபட்ச அடிப்படை வரி 10 விழுக்காடு விதிக்கப்படவிருப்பதாக டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வர்த்தக மீறல்களில் "மோசமானவை" என்று டிரம்ப் கருதும் நாடுகளுக்கு அதிக வரி விகிதம் விதிக்கப்படவிருக்கிறது.
உள்நாட்டு உற்பத்தித் துறையை ஊக்குவிப்பது, அரசாங்க வருமானத்தை அதிகரிப்பது, வர்த்தகத்தில் மோசடியைத் தடுப்பது ஆகியவற்றின் மூலம், தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுவதை இந்தப் புதிய பொருளாதார முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளதாக TRUMP கூறினார்.
வெள்ளை மாளிகை செய்தியாளர்களுக்கு வழங்கிய பல ஆவணங்கள், டிரம்ப் விதித்த சில பரஸ்பர கட்டண விகிதங்களை காட்டுகின்றன.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34 விழுக்காடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருட்களுக்கு 20 விழுக்காடு, வியட்நாமின் பொருட்களுக்கு 46 விழுக்காடு, இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 விழுக்காடு வரி விதிப்பும் அதில் அடங்கும்.
சுமார் 60 நாடுகளுக்கு 10 விழுக்காட்டிற்கு மேற்பட்ட வரி விதிக்கப்படவிருக்கிறது.
ஏப்ரல் 5-ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி 10 விழுக்காட்டு இறக்குமதி வரி விதிப்பு அமலுக்கு வருவதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)