புத்ரா ஹைட்ஸ், 02 ஏப்ரல் (பெர்னாமா) - புத்ரா ஹைட்ஸ்சில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் வகையில் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுடன் பெட்ரோலியம் நேஷனல் நிறுவனம்,பெட்ரோனாஸ் இணைந்து செயல்படும்.
பாதிக்கப்பட்ட அந்த எரிவாயு குழாய், தனது துணை நிறுவனமான பெட்ரோனாஸ் கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என்று தெரிவித்த பெட்ரோனாஸ்,
சம்பவத்தினால் ஏற்பட்ட முழு தாக்கத்தையும் மதிப்பிடுவதற்கு அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் என்று கூறியது.
எரிவாயு விநியோகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமது தரப்பு முன்கூட்டியே மேற்கொண்டு வருவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தடங்கல்களைக் குறைத்தல், மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்துதல், பாதுகாப்பாகவும் திறமையாகவும் செயல்பாட்டை மீண்டும் தொடங்குதல் ஆகியவற்றுடன் இவ்விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் நிறுவங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகியவை இதில் உட்படுத்தப்படும் என்று பெட்ரோனாஸ் விவரித்தது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது மற்றும் சம்பவத்திற்கான காரணத்தை ஆராயும்போது எரிவாயு விநியோகத்தின் பாதுகாப்பை கண்காணிப்பது ஆகியவற்றிற்கே பெட்ரோனாஸ் தற்போது முன்னுரிமை வழங்கும்.
அதேவேளையில் சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள பிஸ் புத்ரா ஹைட்ஸ், பிஎஸ் கேஎம் 2 எல்டிபி மற்றும் பிஸ் புத்ரா பெஸ்தாரி ஆகிய மூன்று பெட்ரோல் நிலையங்களும், அதிகாரிகளின் அனுமதியைத் தொடர்ந்து தனது செயல்பாட்டினை மீண்டும் தொடங்கியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)