விளையாட்டு

நட்சத்திர ஆட்டக்காரர்கள் இன்றி பிரேசிலை வீழ்த்திய அர்ஜெண்டினா

26/03/2025 07:13 PM

பியூனஸ் அயர்ஸ், 26 மார்ச் (பெர்னாமா) -- இன்று அதிகாலை நடைபெற்ற 2026ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிக்கான தென் அமெரிக்கா மண்டலத்தின் தகுதிச் சுற்றில், அர்ஜெண்டினா அணி பிரேசிலை 4-1 என்றப் புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.

தங்களது நட்சத்திர ஆட்டக்காரர்கள் இன்றியும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதை அவ்வணி நிரூபித்துக் காட்டியுள்ளது.

லியோனல் மெஸ்சி மட்டுமல்லாது முன்னணி தாக்குதல் ஆட்டக்காரர் லாட்டாரோ மார்டினெஸ் இன்றியும் அர்ஜெண்டினா விளையாடியது.

ஆட்டத்தின் நான்காம் நிமிடத்திலேயே ஜூலியன் அல்வாரெஸ் தமது அணிக்கான முதல் கோலை அடித்தார்.

அதன் பின்னர், நேரத்தைக் கடத்தாமல் ஆட்டத்தின் 12-ஆவது நிமிடத்தில் என்ஸோ பெர்னாண்டஸ் இரண்டாம் கோலை அடித்தார்.

இதனிடையே, அர்ஜெண்டினாவின் தற்காப்பு ஆட்டக்காரர் கிறிஸ்டியன் ரோமெரோவின் செய்த தவற்றினால் ஆட்டத்தின் 26-ஆவது நிமிடத்தில் பிரேசிலின் மாதியஸ் குன்ஹா தமது அணிக்கான முதல் கோலை அடித்தார்.

எனினும், 37-ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் அலெக்சிஸ் மெக்அலிஸ்டர் மூன்றாம் கோலையும் 71-ஆவது நிமிடத்தில் கியுலியானோ சிமியோன் நான்காவது கோலையும் அடித்து வெற்றியைச் சாதகமாக்கினர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)