ஜாலான் பினாங், 21 மே (பெர்னாமா) -- அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் 48-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு, 1,200-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பதிந்துக் கொண்டுள்ளனர்.
ஆசியான் தொடர்பான செய்திகளைச் சேகரிக்க பதிந்துக் கொண்டிருக்கும் அந்த எண்ணிக்கையில், 500 அனைத்துலக செய்தி நிறுவனங்களும் அடங்கியிருப்பதாக, தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி பட்சில் கூறினார்.
''இது அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பு ஆகும். இது ஆசியான் உச்சநிலை மாநாடு, ஆசியான் ஜிசிசி மாநாடு மற்றும் ஆசியான் ஜிசிசி சீனா உச்சநிலை மாநாடு நடைபெறுவதை ஆவலுடன் எதிர்பார்க்கப்படுவதைக் காட்டுகின்றது. அதோடு, பல்வேறு நாடுகளில் உள்ள செய்தி நிறுவனங்களின் மூலம் செய்திகள் ஒளிப்பரப்படும்'', என்றார் அவர்.
மாநாடு நடைபெறவிருக்கும் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ஃபஹ்மி குறிப்பிட்டார்.
இதனிடையே, கே.எல்.சி.சி மாநாட்டு மையத்தில் இணைய இணைப்பை மேம்படுத்த 31 '5G in a box' சேவையை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் எம்.சி.எம்.சி ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இன்று, கே.எல்.சி.சி-யில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஊடக மையத்தைப் பார்வையிட்ட பின்னர், ஃபஹ்மி செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)