பொது

நிலச்சரிவினால் பூர்வக்குடி மக்களின் வெளி உலகத்துடனான தொடர்பு துண்டிப்பு

18/05/2025 06:33 PM

குவா மூசாங், 18 மே (பெர்னாமா) -- போஸ் சிம்போர் மற்றும் போஸ் கோப்ற்கு செல்வதற்கான முதன்மை பாதைகள், சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சேதமடைந்ததால், கிளந்தான், குவா மூசாங்கின் புறநகர் பகுதியில் உள்ள இரண்டு குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் 3,000கும் மேற்பட்ட பூர்வக்குடி மக்களின், வெளி உலகத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழையினால் நிகழ்ந்ததாக நம்பப்படும் அச்சம்பவத்தினால், தினசரி பணிகளுக்காக குவா மூசாங் நகருக்கு செல்ல சுமார் 10 மணி நேரம், சவால்மிக்க பயணத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

குவா மூசாங் நகருக்கு இதர 19 குடியிருப்பாளர்களுடன் பயணம் செய்துக் கொண்டிருந்தபோது காலை சுமார் 9 மணிக்கு இச்சம்பவம் குறித்து தெரிய வந்ததாக போஸ் சிம்போரை சேர்ந்த முஹமட் ஷஃபிக் டென்டி அப்துல்லா தெரிவித்தார்.

பெனாட் கிராமத்தைச் சென்றடைந்ததும், அந்தப் பாதை சுமார் இரண்டு மீட்டருக்கு புதையுண்டிருந்தது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

அத்தடையினால், வழக்கமாக மூன்று மணி நேர மட்டும் ஆகும் பயணம் ஒன்பது மணி நேரமாகியதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, தொடர் மழை காரணமாக வழுக்கும் சிவப்பு மண் சாலை தங்கள் பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் பயணத்தைக் கடினமாக்குவதாக போஸ் கோப், காவின் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு குடியிருப்பாளரான அலோங் அபோக் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் தொடங்கிய மழை சனிக்கிழமை காலை வரை நீடித்ததாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)