கோலாலம்பூர், 18 மே (பெர்னாமா) -- இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் கோலாலம்பூர் முழுவதிலும் போதைப்பொருளைத் தவறாகப் பயன்படுத்தியதாக 5,800 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை 13.8 விழுக்காடு குறைந்துள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவன தலைமை இயக்குநர், டத்தோ ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.
கோலாலம்பூரில், போதைப்பொருளையும் தடை விதிக்கப்பட்ட பொருளையும் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான விகிதம் ஒரு லட்சம் பேரில் 253 போதைப் பித்தர்கள் என்று தற்போதைய புள்ளிவிவரம் காட்டுவதாக அவர் கூறினார்.
போதைப் பித்தர்களின் முதன்மை தேர்வாக இருக்கும் ஆம்பெடமைன் ரக போதைப்பொருள் அதிகமாக அதாவது 65 விழுக்காடு பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அப்போதைப்பொருளை 3,768 பேர் பயன்படுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று, கோலாலம்பூர் மாநகராண்மைக் கழக சதுக்கத்தில் 2025ஆம் ஆண்டு போதைப்பொருள் தடுப்பு தினத்தை நினைவுகூறும் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ருஸ்லின் அவ்வாறு தெரிவித்தார்.
போதைப்பொருளின் அபாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)