பொது

ஆடவர் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவத்தின் விசாரணைக்கு உதவ இருவர் கைது

18/05/2025 06:15 PM

பட்டர்வெர்த், 18 மே (பெர்னாமா) -- கடந்த வெள்ளிக்கிழமை, பினாங்கு, ஜாலான் ராஜா ஊடாவில் உள்ள ஓர் உணவகத்தின் முன்பு, ஒருவர் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவத்தின் விசாரணைக்கு உதவ, இரு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இரவு மணி 7.20-க்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரான 30 வயது உள்நாட்டு ஆடவர் ஒருவர் தமது நண்பருடன் அந்த உணவகத்திற்கு உணவருந்த சென்றதாக வடக்கு செபெராங் பிறை மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் சி. தர்மலிங்கம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் காரில் இருந்து இறங்கி உணவகத்தை நோக்கி செல்லும்போது, அவரின் பின்புறம் இருந்து முகமூடி அணிந்த ஆடவர் ஒருவர் தாக்கியதாக தர்மலிங்கம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர் தப்பியோடிய வேளையில், சந்தேக நபர் ஏறிச்சென்ற காரினால் மோதப்பட்டு கீழே விழுந்தபோது, முகமூடி அணிந்த மேலும் மூன்று சந்தேக நபர்களால் பாராங் கத்தியைக் கொண்டு தாக்கப்பட்டுள்ளார்.

உதவி கோரி, பாதிக்கப்பட்டவர் அருகில் இருந்த தனியார் சிகிச்சையகத்தினுள் நுழைந்து உயிர் பிழைக்க முயற்சித்ததாக தர்மலிங்கம் கூறினார்.

பாதிக்கப்பட்டவருக்கு தொடக்கக்கட்ட சிகிச்சையளித்த தனியார் சிகிச்சையக மருத்துவர், பின்னர் அவருக்கு தொடர் சிகிச்சையளிக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்சை தொடர்பு கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் தற்போது செபெராங் ஜெயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு, சீரான நிலையிலும் உள்ளார்.

இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 326-இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)