பொது

புறக்கணிப்பின் காரணமாகவே பாதுகாப்பு கழகங்களில் அதிகமான பிள்ளைகள் சேர்க்கப்படுகின்றனர்

18/05/2025 04:29 PM

கோலாலம்பூர், 18 மே (பெர்னாமா) -- பெற்றோர் மற்றும் பாதுகாவலர் புறக்கணிப்பின் காரணமாகவே, சமூகநலத் துறை, ஜேகேஎம்-இன் கீழ் செயல்படும் பாதுகாப்பு கழகங்களில் அதிகமான பிள்ளைகள் சேர்க்கப்படுகின்றனர்.

உணர்ச்சி மற்றும் உடல் ரீதியாக புறக்கணிக்கப்பட்ட பிள்ளைகள் அக்கழகங்களில் சேர்க்கப்படாத பட்சத்தில், அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகும் என்று ஜேகேஎம் தலைமை இயக்குநர் டத்தோ செ முராட் சயாங் ரம்ஜன் தெரிவித்தார்.

அக்கழகங்களில் சேர்க்கப்பட்டுள்ள 1,763 பிள்ளைகளில் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் அதாவது 999 பேர், பெற்றோர் மற்றும் பாதுகாவலர் புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதோடு, 180 பிள்ளைகள் துன்புறுத்தலுக்கு ஆளானதால் அதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிக வாழ்க்கைச் சுமையினால் மனவுளைச்சலை எதிர்நோக்கிய கணவன் மனைவி தம்பதியர் உட்பட, போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதாக செ முராட் மேலும் விவரித்தார்.

மேலும், 92 பிள்ளைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், நேரடியாகவே ஜேகேஎம்-இடம் அப்பிள்ளைகளை சேர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பெற்றோர்கள் குழந்தைகளை புறக்கணிப்பதைத் தடுக்கும் முயற்சியில், பெற்றோர் குறிப்பாக தாய்மார்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை உள்ளடக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)