பொது

எஃப்.ஆர்.யூ விபத்து: ஜாமின் செலுத்த இயலாத ஓட்டுநர்

17/05/2025 05:31 PM

ஈப்போ, 17 மே (பெர்னாமா) -- கடந்த செவ்வாய்க்கிழமை, எஃப்.ஆர்.யூ எனப்படும் சேமப்படை உறுப்பினர்களுக்கு மரணம் விளைவிக்கும் வகையில் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட லாரி ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட ஜாமின் தொகை, இன்று வரையில் செலுத்தப்படவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர் முழுமையான குற்றவாளி அல்ல என்றும், அவரின் ஜாமின் தொகையை செலுத்த உதவுவதற்கு பொதுமக்கள் சிலர் தயாராக இருப்பதாக சமூக ஊடகங்களில் பகிரப்படுவது தொடர்பில், பேராக் மாநில போலீஸ் துணைத் தலைவர், டிசிபி சுல்கஃப்லி சரியாட் அவ்வாறு கூறினார்.

அந்த லாரி ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் தொகை 6,000 ரிங்கிட்டை, அவரால் செலுத்த இயலவில்லை.

ஆகவே, பணம் செலுத்த முடியாததால், போலீஸ் நிலைய சிறையில் அடைக்கப்படுவதோடு, வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் பத்து காஜா சிறைக்கு மாற்றப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சம்பவம் நிகழ்ந்த இடத்தில் லாரி ஓட்டுநர் ஒரு வாகனத்தைத் தவிர்க்க முயற்சிப்பதைக் கண்டதாகக் கூறும் சாட்சிகளும், விசாரணைக்கு உதவ இன்னும் முன்வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)