பொது

சேமப்படை உறுப்பினர் விபத்து விவகாரம்; குற்றத்தை மறுத்த லாரி ஓட்டுநர்

16/05/2025 06:33 PM

தெலுக் இந்தான், 16 மே (பெர்னாமா) - கடந்த வாரம் ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி FRU எனப்படும் சேமப் படையின் உறுப்பினர்கள் ஒன்பது பேருக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டை லாரி ஓட்டுநர் ஒருவர் இன்று தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்தார்.

நீதிபதி நோர்ஹமிஸா ஷாஹய்புடின் முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்ட 45 வயதான ருடி சுல்கர்னாய்ன் மாட் ராடி  அதனை மறுத்து விசாரணைக் கோரினார்.

மே 13-ஆம் தேதி காலை மணி 9.05-க்கு ஜாலன் சுங்கை மானிக்கின் 15-ஆவது கிலோ மீட்டரில் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி சார்ஜன் எஸ்.பெருமாள் என்பவருக்கு மரணம் விளைவித்ததாக லாரி ஓட்டுநரான ருடி மீது முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

மேலும் அதே குற்றத்தைப் புரிந்து 46 வயதான Sjn Mohd Roslan Abd Rahim, 41 வயதான Kpl Mohd Pozli Jaudin, 34 வயதான Kpl Nurit Ak Pandak, 38 வயதான Kpl Amiruddin Zabri, 38 வயதான Kpl Mohamad Hilmi Mohd Azlan, 35 வயதான Kpl Muhamad Akmal Muhamad, 33 வயதான L/Kpl Damarrulan Abdul Latif மற்றும் 28 வயதான Konstabel Akmal Wafi Annuar ஆகியோருக்கு மரணம் விளைவித்ததாக அவர் மீது இரண்டு முதல் ஒன்பது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 

ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தைச் செலுத்தி மரணம் விளைவித்ததற்காக, 1987-ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டம் செக்‌ஷன் 41(1)-றின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.

ஒவ்வோர் குற்றச்சாட்டிற்கும் 10,000 ரிங்கிட் ஜாமின் தொகை விதிக்கப்பட்டதோடு வழக்கின் மறுசெவிமடுப்பு ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்போகாத அபராதமும் விதிக்கப்படுவதோடு, ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதற்கும் அல்லது பெறுவதற்கும் தகுதி நீக்கம் செய்யப்படும்.

நீதிமன்றத்தில் விசாரணை முடிவடையும் வரை ஓட்டுநரின் வாகனம் ஓட்டும் உரிமத்தை இடைக்கால தடை செய்வதோடு, அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒவ்வொரு வாரமும் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)