கோலாலம்பூர், 15 மே (பெர்னாமா) - அரசாங்கத் துறையில் சிறந்த சேவையாளராக மிளிர்பவர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் சிறந்த சேவைக்கான விருது ஏபிசி வழங்கி அங்கீகரிக்கப்படுகிறது.
அதில் இம்முறை தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவைச் சேர்ந்த இரு இந்தியர்கள் உட்பட மொத்தம் 63 பணியாளர்களுக்கு இவ்விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
பெர்னாமாவைப் பிரதிநிதித்து இவ்விருது பெற்றவர்களில் பெரும்பாலானோர், முதல் முறையாக ஏபிசி விருதைப் பெறுவதாகவும் அவர்களில் அதிகமானோர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் என்றும் பெர்னாமா தலைமை செயல்முறை அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.
"சிறந்த சேவையைத் தொடர்ந்து வழங்குவதற்கான ஊக்கமாக அவர்களுக்குத் தகுதியான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டிய நேரம் இது என்று நாங்கள் நம்புகிறோம். இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக ஏபிசி விருது பெறுபவர்களும் உள்ளனர்," என்றார் அவர்.
இன்று கோலாலம்பூர் ஶ்ரீ அங்காசா அங்காசாபூரி கோத்தா மீடியா அரங்கில் தொடர்பு அமைச்சின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அவ்வாறு கூறினார்.
தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இவ்விழாவை தொடக்கி வைத்த வேளையில், தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங், அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ முஹமட் பவுசி முஹமட் இசா ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
இதனிடையே, தங்களின் இத்தனை ஆண்டுகால உழைப்பிற்கு கிடைத்த இந்த அங்கீகாரம், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு பெரும் ஊக்குவிப்பாக அமைந்துள்ளதாக, பெர்னாமா சார்பில் ஏசிபி விருது பெற்ற இரண்டே இந்தியப் பணியாளர்களான...
பெர்னாமா தமிழ்ச் செய்தி பிரிவு பணியாளரும், செய்தி வாசிப்பாளருமான ஜமுனா வேலாயுதமும், பெர்னாமா தொலைக்காட்சியின் துணை செய்தி ஆசிரியர்
ஜெ. கவிராஜனும் தெரிவித்தனர்.
தொடர்பு அமைச்சின் தீபகற்ப மண்டலத்தின் 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த சேவைக்கான விருது பெற்ற 691 பேரில் மொத்தம் 541 பேர் இன்று சிறப்பிக்கப்பட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)