கோலாலம்பூர், 12 மே (பெர்னாமா) - ஈன்ற பிள்ளையை அன்னைக்கு முன்னமே அரவணைக்கும் வெண் தேவதைகள்...
விருப்பு வெறுப்புகளை மறந்து, அல்லும் பகலும் நோயாளிகளை அரவணக்கும் தியாகச் சுடர்...
இவ்வாறு தாதியர்களின் அர்ப்பணிப்புகளை நினைவுகூர்ந்து அவர்களின் சேவைக்கு நன்றி பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் மே 12-ஆம் தேதி உலக தாதியர் தினம் கொண்டாடப்படுகிறது.
தாதிமைத் துறையில் முன்னோடியாகக் கருதப்படும் FLORENCE NIGHTINGALE பிறந்த நாளிலேயே இத்தினம் அனுசரிக்கப்பட வேண்டும் என்று 1965-ஆம் ஆண்டு முதல் இந்நாள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
சுயவிருப்பதோடு இச்சேவைத்துறையில் கால்பதித்து ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்கள் மற்றும் நோயாளிகளோடு பயணிக்கும் சில தாதியர்கள் தங்களின் உள்ளுணர்வை பெர்மானா தமிழ்ச் செய்திகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
''இந்து துறையில் ஆசைப்பட்டே இணைந்தேன். இதில் கிடைக்கின்ற திருப்தியும் மனநிம்மதியும் மற்ற துறைகளில் கிடைக்காது. இங்கு வரும் ஒவ்வொரு நோயாளிகளையும் குடும்ப உறுப்பினர் போல நினைத்தே அரவணைத்து வருகிறேன்,'' என்று சிகிச்சையகம் ஒன்றில் தாதியராகப் பணிபுரியும் நாராயணி சுப்பிரமணியம் தெரிவித்தார்.
''நான் அவசர சிகிச்சைப் பிரிவில் வேலை செய்வதால் சில சமயம் நோயாளிகளைக் காட்டிலும் அவர்களின் குடும்பத்தாரை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும். அவர்களுடைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அதை நான் அமைதியாக ஏற்றுக் கொள்வேன்,'' என்று துர்காதேவி பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
''இது மிகவும் சவாலான துறை. குறிப்பாக ரத்தத்தைப் பார்த்தால் பயப்படக்கூடாது. நோயாளிகள் சிறுநீர், மலம் கழித்துவிட்டால் அதை முகம் கோணாமல் சுத்தப்படுத்த வேண்டும். சொந்த கோபங்களையோ வெறுப்புகளையோ அவர்களிடம் காட்டக்கூடாது,'' என்று இயோன் லியோ கின் @ ஆபெங் என்பவர் தெரிவித்தார்.
தியாக சேவையின் மூலமாக அரும்பணியாற்றி வரும் தாதியர்கள் இல்லையெனில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாகிவிடும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)