கோலாலம்பூர், 11 மே (பெர்னாமா) - மனைவி, மகள், சகோதரி, தோழி என்ற பல உறவுகளில் பெண்மை மிளிர்ந்தாலும்... அன்னை என்ற பாத்திரமே அவரை கைக்கூப்பி வணங்க வைக்கும்.
தாய்மைக்கு இணையானது உலகில் வேறு எதுவும் இல்லை என்பதோடு, சுயநல மில்லாத கலப்படமற்ற அன்பு அம்மாவிடம் மட்டுமே கிடைக்கும்.
'பெண்ணை ஒரு தெய்வமாய், பேசுகின்ற காரணம், அவள் தாங்கும் தாய்மைதான்' என்று இசையமைப்பாளர் இளையராஜா ஒரு பாடலில் குறிப்பிட்டிருப்பார்.
அத்தகைய அன்னையின் அர்ப்பணிப்பை நன்றியோடு நினைவுகூரும் அன்னையர் தினம் இன்று.
1908-ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி அன்னா ஜர்விஸ் என்பவரால் அமெரிக்காவில் முதல் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
அந்நாட்டைப் பின்பற்றி மலேசியா, இந்தியா, இங்கிலாந்து, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரேலியா, மெக்சிக்கோ, கனடா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் இன்றுவரையில் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் அன்னையர் தினத்தை கொண்டாடி வருகின்றன.
அன்னையின் தியாக உணர்விற்கு நன்றி பாராட்டும் விதமாக, இன்றைய நாளில் பரிசுகள், வாழ்த்து அட்டைகள், பூங்கொத்து, விருப்ப உடை, உணவு, நகைகள் போன்றவற்றை பலர் தங்களின் அம்மாவுக்கு அன்பளிப்பாக வழங்குவர்.
இன்னும் சிலர் அம்மாவுக்கு பிடித்த சுற்றுலா தளங்கள், ஆலயங்கள் மட்டுமின்றி உறவினர் இல்லங்களுக்கும் அழைத்து சென்று அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைப்பர்.
அதேவேளையில்,சமூக ஊடகங்களின் நாட்டமுடையவர்கள், தங்களின் அம்மாவைப் பற்றிய நினைவுகளையும் புகைப்படங்களையும் அதில் பகிர்ந்து கொள்வதும் மறுப்பதற்கில்லை.
இத்தனை அக்கறையும், பாசமும் இந்த ஒருநாள் மட்டும் இருந்தால் போதுமா?
பத்து திங்கள் வலிகளையும் வேதனைகளையும் தாங்கி, தூக்கம் மறந்து, பிடித்த உணவுகளைக் கூட ருசி பார்க்க முடியாமல் தள்ளி வைத்து, அரும்பாடுபட்டு பிள்ளையைப் பெற்றெடுக்கும்...
அந்த நடமாடும் தெய்வத்தை, வாழ்நாள் முழுவதும் போற்றி, கடைசி வரை அவரைக் கண் கலங்காமல் பார்த்து கொள்வதே பிள்ளைகளின் உண்மையான கடமையாகும்.
வாழும் காலத்திலேயே அன்னையின் ஆசைகளை நிறைவேற்றிவிட வேண்டும்.
மாறாக, அவர் இவ்வுலகை விட்டு மறைந்த பின்னர், அவருக்கு விருப்பமானவற்றை செய்வதும், அவரின் புகழை விளம்பரப்படுத்துவதும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)