சிறப்புச் செய்தி

எஸ்.பி.எம்-இல் தெலுங்கு மொழியையும் ஒரு தேர்வு பாடமாக அங்கீகரிக்க கோரிக்கை...

11/05/2025 05:23 PM

ரவாங், 11 மே (பெர்னாமா) -- எஸ்.பி,எம்-இல் தெலுங்கு மொழியும் ஒரு தேர்வு பாடமாக அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மலேசிய தெலுங்கு சங்கம் ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமியிடம் முன் வைத்துள்ளது.

இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட செனட்டர் சரஸ்வதி, இந்தப் பரிந்துரையைச் சம்பந்தப்பட்ட அமைச்சிடம் கொண்டுச் சேர்த்தப் பின்னர், அதற்கான அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை கண்காணிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தங்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தெலுங்கு மொழியையும் கலை மற்றும் கலாச்சாரத்தையும் கற்பிக்கும் நடவடிக்கையை மலேசிய தெலுங்கு சங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தற்போது 7,000 மாணவர்கள் தெலுங்கு மொழியை எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்கும் நிலையில், தங்களின் மொழியை தொடர்ந்து வளர்க்க இக்கோரிக்கையை அச்சங்கம் முன் வைத்திருப்பதாக செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.

''முன்பு பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட தெலுங்கு மொழி, இன்று அதற்கு வாய்ப்பில்லாத சூழ்நிலையிலும் சுய முயற்சியில் தெலுங்கு ஆசிரியர்களை சங்கம் உருவாக்கியது. அவர்கள் மூலமாக தெலுங்கு மொழியைக் கற்பித்து 7,000 மாணவர்கள் எழுத மற்றும் படிக்கும் திறனைப் பெற்றனர். இது பெரிய முயற்சி. அதைத் தொடர்ந்து இன்று இக்கோரிக்கை முன் வைக்கப்பட்டிருக்கின்றது,'' என்றார் அவர்.

''மேலும், தங்களின் சமூகத்திற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு உதவும் வகையில், 50 லட்சம் ரிங்கிட் மானியம், வரி விலக்கு மற்றும் உகாதி பண்டிகைக்கு விடுமுறை போன்றவற்றை அரசாங்கம் வழங்க வேண்டும் என்றக் கோரிக்கைகளையும் அச்சங்கம் முன் வைத்துள்ளதாக செனட்டர் சரஸ்வதி குறிப்பிட்டார்.

தெலுங்கு சமூகத்தைச் சார்ந்தவர்கள் சுமார் மூன்று லட்சம் பேர் மலேசியாவில் வாழ்கின்றனர். உகாதி தினத்திற்கு அரசாங்கம் பதிவு செய்யப்படாத விடுமுறையாக வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இவை அனைத்தும் நியாயமான கோரிக்கைகள். அமைச்சிற்கு இந்தக் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருப்பதால், அமைச்சரின் பார்வைக்கு கொண்டுச் சேர்ந்து, அதன் அடுத்த நடவடிக்கைகளை நான் தொடர்ந்து கண்காணித்து வருவேன்,'' என்றார் அவர்.

சனிக்கிழமை, சிலாங்கூர், ரவாங்கில் உள்ள மலேசிய தெலுங்கு கழகத்தில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான உகாதி பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, தெலுங்கு சமூகத்தை ஒன்றிணைக்கும் இந்த உகாதி பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டிருப்பதாக மலேசிய தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவர் சத்தியா சுதாகரன் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் வழி அரசாங்கத்திடம் வைத்திருக்கும் இந்த நான்கு கோரிக்கைகளுக்கும் நல்ல பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக சத்தியா தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)